பதிவு செய்த நாள்
16
பிப்
2013
02:02
நகரத்தின் வெப்பம் நம்மை நாளும் துரத்திக் கொண்டிருக்கிறது. உயிரான (சொல்லிக் கொள்கிறார்கள்) நண்பன் கூட, நான் மீட்டிங்ல இருக்கேன்டா... அப்புறம் கூப்பிடுறேன் என்று போலியான பில்டப்புடன் பழகும் தன்மை. பஸ்சில் ஏறியதிலிருந்து, இறங்கும் வரை அறிமுகம் இல்லாத மனிதர்கள். அப்படியே பழகினாலும், பயணத்துடன் நின்று விடும் கொடுமை, என்ன வாழ்க்கை சார் இது... நகரம் வெறுத்துப் போன (மன்னிக்கவும் நகரம் உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓ.கே.,) நமது மனம், கிராமத்தை தேடிச் சென்றது. கண்ணில் பட்டது காரைக்குடி அருகே உள்ள வ.சூரக்குடி கிராமம். வ.சூரக்குடி, திருவேலங்குடியில் நின்று செல்லும், அட்டு அடசு டவுன் பஸ்சை பிடித்து கிளம்பினோம். பஸ் பழசாக இருந்தாலும், கிராமத்து மனம் கமழ்ந்தது. ஏ வா மாயாண்டி பையனா... நீ. இவ்வளவு நாள் எங்கயிருந்த... என்ற பெரியவரின் பாசம், கல்லூரி மாணவனை கட்டிப்போட்டது. எய்யா ராசா செத்த தள்ளி உட்காரு... என, விதைத்த காய்கறியை வித்து போட்டு, சாமான் வாங்கிட்டு வந்த பாட்டி கெஞ்சியது.
இப்படி உறவுமுறை சொல்லி சென்றது, கிராமத்து டவுன் பஸ். காரைக்குடியிலிருந்து 10 கி.மீ., தூரம் கடந்து, வ.சூரக்குடியை அடைந்தோம். ஆரம்பத்தில் உள்ள, தாத்தா டீக்கடை நம்மை வரவேற்றது. (1980லிருந்து டீ அடிக்கிறார்) டீயை தரச்சொல்லி, நைசாக பேச்சை தொடங்கினோம். ஏதும் விசேஷம் உண்டா என்றபோது, நம்மை ஏற, இறங்க பார்த்தவர், விசேஷம் ஒண்ணுமில்லை தம்பி என்றார். அருகில் டீ குடித்து கொண்டிருந்த, பழனியப்பன் விசேஷம் இருக்கு வாங்க என்று அழைத்துச் சென்றார். இங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், சுவாமி உற்சவத்தின் போது, முன்னால் தீவட்டி எடுத்து செல்வது இவர்கள் குடும்பத்தினர் தான்.இந்த ஊரை வன்னியராஜா என்ற சிற்றரசர், எழுவன்கோட்டை பேரரசின் கீழ் ஆண்டு வந்தார். தினமும், மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு குதிரையில் சென்று சாமி கும்பிட்டு வந்தபிறகே, காலையில் சாப்பிட ஆரம்பிப்பாராம். வைகையில் வெள்ளம் வந்ததால், மீனாட்சியம்மனை கும்பிட முடியாமல், பல நாட்கள் சாப்பிடாமல் இருந்துள்ளார். மீனாட்சி அம்மன் அவரது கனவில் தோன்றி, உன்னுடைய ஊரிலே, இலந்தை மரத்தின் கீழ், விபூதி, எலுமிச்சம்பழம் இருக்கும். அதில் கோயில் கட்டி என்னை கும்பிடு, என்று அருள்பாலித்தார்.
பிறகு இங்கு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உருவானது.கோயில் முகப்பில் உள்ள, கோட்டை முனீஸ்வரர்தான் காவல் தெய்வம். மதுரை கோயிலை போன்ற அமைப்புடன் இந்த கோயில் கட்டப்பட்டதாக வரலாறு.ஒரே கல்லால் ஆன முருகன் சிற்பம், தமிழகத்தில் எங்கும் இல்லை. முருகனின் ஆறு கைகளிலும், ஆறுவிதமான ஒலி எழும்பும். மீனாட்சியம்மன் எலுமிச்சை பழம் வைத்த, இலந்தை மரம் இன்றும் இருக்கிறது. சுமார் 500 ஆண்டு பழமையானது. தனுஷ்கோடியில் புயல் வந்தபோது, இது சரிந்தது. ஆனாலும் துளிர்விட்டு இன்னமும் உள்ளது. இதே போல், மன்னர் அரண்மனை இருந்த பகுதியில், 400 ஆண்டு பழமையான ஆலமரம் உள்ளது. கட்டடங்கள் இன்றி, கட்டாந்தரையாகவே காட்சியளிக்கிறது, என்றார். வ.சூரக்குடியிலிருந்து - திருவேலங்குடி செல்லும் சாலையில், ஒத்தக்கால் மண்டபம், ஓடாத தேர், ஆடாத செக்கு, கூவாத சேவல், ஈனாத வாழை என்ற வரலாற்று சிறப்பு மிக்க கோயில் நம்மை வரவேற்றது. விளக்கம் கேட்ட போது, ஒத்தக்கால் மண்டபம் உடைய கோயில் இன்றும் உள்ளது. தற்போது தான் வசதி கருதி எடுத்து கட்டியுள்ளனர். ஆடாத செக்கு கோயில் அருகேயே உள்ளது. கூவாத சேவல் வழிவழியாக யாராவது ஒருவர் வீட்டில் இருக்கும். ஈனாத வாழை எங்கள் ஊரில், யாராவது ஒருவர் வீட்டில் இருக்கும், என பதிலளித்தார். விவசாயம் தான் இந்த ஊரின் பிரதான தொழில். ஆனாலும், ரியல் எஸ்டேட் வியாபாரம் இந்த ஊரின் எல்லையில் கடை விரித்துள்ளது. என்ன செய்வது, மழை தண்ணி இல்ல... வருமானம் இல்லை... என்ற விவசாயியின் அழுகுரலும் ஒலித்து கொண்டுதான் இருக்கிறது.