தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மூங்கிலனை காமாட்சியம்மன்கோயில் மாசி மகா சிவராத்திரி திரு விழாவிற்காக நேற்று முகூர்த்தக்கால் நடப்பட்டது. தேவதானப்பட்டியில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் மஞ்சளாற்றங்கரையில், மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் உள்ளது.இங்கு மூலஸ்தானம் என்றும் குச்சு வீட்டின் கதவு திறக்கப்படுவது இல்லை. அடைக்கப்பட்ட கதவுக்கு மூன்று கால பூஜை நடக்கிறது. இரவு, பகல் அணையாத நெய் விளக்கு எரிகிறது. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டு தோறும் மாசி மகா சிவராத்திரி அன்று, திருவிழா துவங்கி தொடர்ந்து ஒரு வாரம் நடக்கும். நடப்பு ஆண்டு வரும் மார்ச் 10 ல் துவங்கி 17 வரை திருவிழா நடக்க இருக்கிறது. நேற்று காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் பரம்பரை அறங்காவலர்களால் ஸ்ரீ காமக்கம்மாளுக்கு சிரார்த்தம் செய்து, முகூர்த்தக்கால் நடப்பட்டது. பரம்பரை நிர்வாக அறங்காவலர் தனராஜ்பாண்டியன், பரம்பரை அறங்காவலர் கனகராஜ்பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் ராஜா ஆகியோர் செய்து வருகின்றனர்.