பதிவு செய்த நாள்
02
மார்
2013
10:03
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தங்க விமான பணிக்காக, தங்க கட்டிகளை தகடாக மாற்றும் பணி நேற்று துவங்கியது. இக்கோயிலின் விமானத்தை தங்கமாக மாற்றும் பணி, நாச்சியார் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியது. இதற்காக, சுண்ணாம்பு கலவையில் கட்டப்பட்ட விமானம் இடிக்கப்பட்டு, புதிய விமானம் கட்டப்பட்டது. அதில் பொருத்துவதற்காக, செம்பினால் ஆன சிற்பங்கள் செதுக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. நேற்று, பக்தர்களிடமிருந்து பெறப்பட்ட தங்க கட்டிகளை, தகடாக்கும் பணி துவங்கியது. தக்கார் ரவிச்சந்திரன் துவக்கி வைத்து கூறியதாவது: தங்க விமான பணிக்கு 70 கிலோ தங்கம் தேவை. தற்போது ஆண்டாள் சாரிட்டபிள் டிரஸ்டால் வழங்கப்பட்ட 5கிலோ, பக்தர்கள் வழங்கிய 25 கிலோ தங்க கட்டிகளை தகடாக்கும் பணி துவங்கியுள்ளது. முதலில் விமானம் கலசத்திலிருந்து கீழ் பகுதி கருடாழ்வார் வரை 1400 சதுர அடிக்கு, முதல் தகடு பதிக்கப்பட உள்ளது. ஒரு சதுர அடிக்கு 15 கிராம் வீதம், 21 கிலோ தங்கம் தகடாக மாற்றப்பட்டு பதிக்கப்படும். இன்று(நேற்று) மட்டும் நான்கு கிலோ தங்க கட்டிகள் தகடாக மாற்றப்பட்டது, என்றார். துணை ஆணையாளர் சிவாஜி , நகை மதிப்பீட்டு வல்லுநர் தர்மராஜ், செயல் அலுவலர் சுப்பிரமணியம் கலந்து கொண்டனர். தங்க தகடு பதிக்கும் பணி நடக்கும் அறைக்கு, துப்பாக்கி ஏந்திய இரு போலீசார் பாதுகாப்பும், 24 மணி நேர கேமிர கண்காணிப்பும் போடப்பட்டுள்ளது.