பதிவு செய்த நாள்
02
மார்
2013
10:03
மண்டைக்காடு கோயில் மாசிக் கொடை விழா நாளை கொடி ஏற்றத்துடன் துவங்குகிறது. மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் மாசிக்கொடை விழா நாளை துவங்கி 12ம் தேதி வரை பத்து நாட்கள் நடக்கிறது. நாளை காலை 4.30 மணிக்கு நடைதிறப்பு, 5க்கு கணபதி ஹோமம், 6க்கு பஞ்சாபிஷேகம் அதை தொடர்ந்து தீபாராதனை, 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் திருக்கொடியேற்றம், பகல் 1 மணிக்கு உச்சகால பூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9.30 மணிக்கு அத்தாழ பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்து சமய மாநாட்டு பந்தலில் நாளை காலை 4.30 மணி முதல் 6 மணி வரை கணபதி ஹோமம் அதை தொடர்ந்து பஜனை, 9 மணிக்கு மாநாடு கொடிஏற்றம், 9.30 மணிக்கு அம்பாசமுத்திரம் ஸ்ரீராமகிருஷ்ணா ஆசிரம தலைவர் ஸ்ரீமத் சுவாமி ராமகிருஷ்ணாநந்தஜி மகராஜ் மாநாட்டை திறந்து வைத்து பேசுகிறார்.
மாநில பா.ஜ., துணைத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் குத்துவிளக்கேற்றி பேசுகிறார். வனத்துறை அமைச்சர் பச்சைமால், வெள்ளிமலை ஸ்ரீ விவேகானந்த ஆஸ்ரமத்தலைவர் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ், வித்யா பீட சுவாமி கருணானந்தஜி மகராஜ், மாநில பா.ஜ., தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகர், முன்னாள் எம்.எல்.ஏ., வேலாயுதன், நாகர்கோவில் நகராட்சி சேர்மன் மீனாதேவ், மண்டைக்காடு பஞ்., தலைவர் மகேஸ்வரி முருகேசன், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் கிருஷ்ணதாஸ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவகுற்றாலம் ஆகியோர் பேசுகின்றனர். பிற்பகல் 2 மணிக்கு ஆன்மிக உரை, மாலை 6 மணி முதல் 3006 திருவிளக்கு பூஜையும், ஸ்ரீராஜராஜேஸ்வரி பூஜையும், இரவு 8 மணிக்கு நர்த்தன பஜனை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறையினரும், ஹைந்தவ சேவா சங்கத்தினரும் செய்து வருகின்றனர்.