பதிவு செய்த நாள்
08
மார்
2013
10:03
ஊட்டி: ஊட்டியில் மலையர் ஆதிவாசிகள் நிகழ்த்திய, "தைய்யம் நிகழ்ச்சியில், "மனிதர்களின் ஏற்ற தாழ்வுகள், ஆணவம் மறைந்து சாம்பலாக வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. சென்னை, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், ஊட்டி பழங்குடியின ஆய்வு மையம் இணைந்து, "தொல் தமிழர் நாகரிகம் குறித்த, தேசிய கருத்தரங்கை ஊட்டியில் நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோழிக்கோடு பல்கலைக் கழக நாட்டறிவு படிப்பு பள்ளி சார்பில், தமிழகத்தில் இருந்து இடம் பெயர்ந்து, கேரளாவில் வாழ்ந்து வரும், "மலையர் ஆதிவாசி மக்களின், "பொட்டன் தைய்யம் என்ற கலாச்சார நிகழ்ச்சி, ஊட்டி காந்தி மைதானத்தில், நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்டது. சாரல் மழையில், மேக மூட்டமான காலநிலையில், மாலை, 7:00 மணிக்கு, இரண்டு மணி நேரம் மர கட்டைகளின் மீது, தீ எரிக்கப்பட்டது. தொடர்ந்து, பல்வேறு சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் செண்டை மேளம் முழங்க நடந்தன. தைய்யம் கலைஞர் ராமச்சந்திர பணிக்கர், பல்வேறு கலாச்சார ஒப்பனைகளுடன் நடனமாடியவாறு வந்து, தீயில் விழுந்தார். இரு சக கலைஞர்கள் அவரை பிடித்து எழுப்பினர். பின்னர், மீண்டும் கொழுந்து விட்டு எரிந்த மற்றொரு தீயில், தெய்வ அருள் வந்ததை போன்று சப்தம் எழுப்பியவாறு விழுந்தார். இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது.
கோழிக்கோடு பல்கலைக்கழக நாட்டறிவு படிப்பு பள்ளியின் நிர்வாகி பேராசிரியர் டாக்டர் கோவிந்தராஜா வர்மா கூறியதாவது: மலையாளத்தின் தாய் மொழி தமிழாகும். ஒரு காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்து வந்த மலையர் ஆதிவாசிகள், வட மலபார் எனப்படும், கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோட்டின் சில பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் கலாச்சாரத்தில், தெய்வீக தன்மை வாய்ந்ததாக, "தைய்யம் விளங்கி வருகிறது. "மனிதர்களின் ஏற்ற தாழ்வுகள், ஆணவம் மறைந்து சாம்பலாக வேண்டும் என்பதே, இந்த நிகழ்ச்சியில் சாராம்சமாகும். தமிழகத்தில் ஊட்டியில் தான், "நெருப்பில் தைய்யம் நிகழ்ச்சி, முதன் முதலாக நிகழ்த்தப்பட்டது. இதை நிகழ்த்திய ராமச்சந்திரன் பணிக்கர், அமெரிக்காவிலும் தைய்யத்தை நிகழ்த்தி காட்டி பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார். இதில், பழங்குடியினர் ஆய்வு மைய இயக்குனர் மகேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.