பதிவு செய்த நாள்
11
மார்
2013
11:03
புதுக்கோட்டை: திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசிப்பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை தேரோட்டம் நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முக்கிய அம்மன் கோயில்களில் ஒன்று, திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில். இங்கு ஆண்டுதோறும் மாசிப்பெருந்திருவிழா, கோலாகலமாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த, 3ம் தேதி திருக்கொடியேற்றுடன் துவங்கியது. விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் மற்றும் அம்மன் வீதியுலா வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. நேற்று பொங்கல் விழா நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், குடும்பத்துடன் குவிந்த பக்தர்கள், கோயிலைச் சுற்றி அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, இன்று திருத்தேரோட்டம் நடக்கிறது. இதற்காக மாலை, 4 மணிக்கு முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடக்கிறது. தொடர்ந்து, 4.30 மணிக்கு முத்துமாரியம்மன் சர்வ அலங்காரத்துடன், திருத்தேரில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தேரை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக, மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர் திருவிழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, பக்தர்கள் பால்குடம் ஏந்தியும், காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும், ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு, புதுக்கோட்டை நகரின் பல பகுதிகளில் ஆன்மீக அமைப்புகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில், அன்னதானம், மோர், பானகம் போன்றவை வழங்கப்படுகிறது. இரவு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக, கோயிலைச் சுற்றி ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மாசி பெருந்திருவிழா நிறைவு நாளான, 19ம் தேதி இரவு, வீதியுலாவுக்கு பின், அம்மன் கோயிலுக்கு திரும்பியதும் காப்புகள் களையப்பட்டு, மஞ்சள் நீராட்டு நடக்கிறது. இதையடுத்து திருக்கொடி இறக்கப்பட்டு, விழா நிறைவடைகிறது.