பதிவு செய்த நாள்
14
மார்
2013
11:03
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலுக்கு, 2 கோடி ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளோரின், பெயர், பாக்கி விவரம் பிளெக்ஸ் போர்டில் அறிவிப்பாக வைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி டவுனில், நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான, 122 கடைகளில், வாடகைக்கு இருப்போரில் சிலர், 2.4 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளனர். நீண்ட நாட்களாக பாக்கியை தராதவர்களின் கடைகளுக்கு, நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் மற்றும் அதிகாரிகள் கோர்ட் மூலம் உத்தரவு பெற்று, "சீல் வைத்தனர். நெல்லை தெப்பக்குளம் தெருவில், பல ஆண்டுகளாக, 60 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்திருந்த டிம்பர் டிப்போ, 29 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்திருந்த ஆட்டோ பணிமனை, 18 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்திருந்த லாரி ஷெட் ஆகியவை, சமீபத்தில், "சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கோர்ட்டில் வழக்குகளையும் முடிக்காமல், வாடகையையும் தராத பெரிய நிறுவனங்களின் பெயர் பட்டியல், நேற்று நெல்லையப்பர் கோவில் கோபுரம் முன், பெரிய அளவில் பிளெக்ஸ் போர்டாக வைக்கப்பட்டு உள்ளது.