பதிவு செய்த நாள்
22
மார்
2013
10:03
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் கோவில் மலையில், ஏராளமான மாமிசக் கழிவுகள் மற்றும் தலை முடிகள் கொட்டப்படுவதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் துர்நாற்றத்தால், அவதிக்குஉள்ளாகி வருகின்றனர். திருக்கழுக்குன்றத்தில், நான்கு வேதங்களால் உருவான மலை அமைந்துள்ளது. இதன் மீது, வேதகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மலை மீதுள்ள சுவாமியை தரிசிக்க, தினமும் உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இச்சூழலில், மலையில் ஆங்காங்கே மாமிசக் கழிவுகள் மற்றும் முடி திருத்தகங்களில் சேகரமாகும் தலை முடிகள் கொட்டப்படுவதால், பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது: நான்கு வேதங்களால் உருவான மலை என்பதால், இங்கு பவுர்ணமி தோறும், பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். புனிதமான மலையை சுற்றி, ஏராளமான மாமிசக் கடைகள், அசைவ உணவு விடுதிகள் அமைந்துள்ளன. இங்கு சேகரமாகும் கழிவுகள், மலையில் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அதேபோல் முடி திருத்தங்களில் சேகரமாகும் தலை முடிகளும், ஆங்காங்கே கொட்டப்படுகிறது. இவை காற்றில் பறந்து, சுகாதார சீர்கேடு ஏற்படுத்துகிறது. எனவே, மலை பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.