பதிவு செய்த நாள்
23
மார்
2013
10:03
குலசேகரம்: குலசேகரம் இட்டகவேலி நீலகேசி அம்மன் கோயில் விழாவில் இன்று(23ம் தேதி) 161 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்படுகிறது. இட்டகவேலி நீலகேசி அம்மன் முடிப்புரை கோயில் அம்மயிறக்கத் திருவிழா கடந்த 17ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. முதல் நாள் விழாவில் சாவி தானம், அம்மயிறக்கம், பறம்பு நோக்கி எழுந்தருளல் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தூக்க நேர்ச்சை இன்று(23ம் தேதி) நடக்கிறது. குழந்தை வரம் வேண்டியும், குழந்தைகள் நோய் நொடியின்றி நலமுடன் வாழவும் நீலகேசி அம்மனை வேண்டி தூக்க நேர்ச்சை வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த தூக்க நேர்ச்சை அம்மயிறக்க திருவிழாவின் ஏழாவது நாளில் நடத்தப்படுகிறது. தூக்க நேர்ச்சைக்காக விரதமிருக்கும் பக்தர்கள் தூக்க ரதத்தில் நேர்ச்சை நடத்தும் குழந்தைகளைக் கையில் பிடித்தபடி பச்சைப்பந்தலைச் சுற்றி வருவர். பக்தர்கள் ரதத்தை இழுத்துச் செல்வார்கள். முதலில் வெள்ளிப் பிள்ளையை கையில் வைத்தபடி பூஜாரி தூக்க ரதத்தில் பச்சைப்பந்தலைச் சுற்றி வர, அம்மன் தூக்கம் நிறைவேற்றப்படுகிறது. தொடர்ந்து, குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடக்கிறது. இந்த ஆண்டு 161 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்படுகிறது. தூக்க நேர்ச்சையை ஒட்டி மதியம் 12.30க்கு நேர்ச்சை செய்வோர் அம்மனின் குடும்ம வீடான பனங்கோடு தெக்கதில் இருந்து விழா நடக்கும் பறம்பு நோக்கி புறப்படுவார்கள். மதியம் 12.50க்கு குத்தியோட்டம், பூமாலை, தாலப்பொலி, மஞ்சள் குடம், பிடிப்பணம், உருள், துலாபாரம் நேர்ச்சைகள் நடக்கின்றன. மதியம் இரண்டு மணிக்கு தூக்க நேர்ச்சை நடக்கிறது. நாளை(24ம் தேதி) 2007 திருவிளக்கு பூஜை நடக்கிறது. நாளை மறுநாள்(25ம் தேதி) மாமியார் கொடுமையை எதிர்த்துப் போராடிய மருமகள், மாமியாரை வென்ற "கமுகு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.