ஆத்தூர்: ஆத்தூர் சோமநாத சமேத சோமநாதர் ஆலயத்தில் பங்குனித் திருநாளின் 6வது நாளை முன்னிட்டு நேற்று சுவாமி அம்பாள் யானை மற்றும் அன்ன வாகன வீதி உலா நடந்தது. ஆத்தூர் சோமசுந்தரி சமேத சோமநாதர் ஆலயத்தில் வரும் 26ம் தேதி வரை பங்குனித் திருவிழா நடக்கிறது. விழா வை முன்னிட்டு கடந்த 17ம் தேதி காலையில் கொடியேற்றம் நடந்தது. இதில் ஆத்தூர் பஞ்.,தலைவர் முருகானந்தம், துணைத் தலைவர் ஆண்டியப்பன், கண்ணன் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். பங்குனித் திருவிழாவை முன்னிட்டு தினமும் காலையில் சுவாமி அம்பாள் திருவீதி உலாவும், இரவில் அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. 6ம் திருவிழாவான நேற்று (22ம் தேதி) இரவில் சுவாமிஅம்பாள் யானை மற்றும் அன்ன வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. பின்னர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நகைச்சுவை பட்டிமன்றம் நடந்தது. ஏற்பாடுகளை ஆத்தூர் சைவ வேளாளர் அபிவிருந்தி சங்கத்தினர் செய்திருந்தனர். 10ம் திருவிழாவான வரும் 26ம் தேதியன்று காலையில் சுவாமி அம்பாள் வழிபாடும், பின்னர் தேரோட்டமும், மதியம் அன்னதானமும், இரவில் திருவீதி உலாவும், தெப்பத்திருவிழாவும் நடக்கிறது.