சிவமூர்த்தங்களில் ஆனந்தநிலையைக் குறிப்பிடும் வடிவமாக இருப்பது நடராஜ மூர்த்தம். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களையும் ஆடியபடியே இவர் நடத்துகிறார். இதில் அழித்தல் தொழிலின் அடையாளமே அவருடைய கையில் இருக்கும் அக்னி. நடராஜர் ஏந்தி நிற்கும் நெருப்பினைச் சாதாரண நெருப்பாக நினைக்கக் கூடாது. ஞானாக்னி என்று இதைக் குறிப்பிடுவர். ஆணவம் முதலான தீய குணங்களின் கட்டுக்குள் சிக்கி உயிர்கள் துன்பப்படுகின்றன. ஞானம் அவற்றை பொசுக்கி விடும் என்பதை காட்டவே அக்னியைத் தாங்கி நிற்கிறார். பஞ்சபூத தத்துவங்களில் மற்றவற்றிற்கு இல்லாத தனிச்சிறப்பு நெருப்புக்கு உண்டு. திருமண வைபவத்தை அக்னி சாட்சியாக செய்வது வழக்கம். வாழ்வின் இன்பதுன்பத்தில் ஒருவருக்கொருவர் உண்மையாக வாழ்வோம் என்ற சத்தியத்தை திருமண பந்தத்தின்போது தம்பதியர் ஏற்றுக்கொள்கின்றனர். அந்தக்காலத்தில் நீதிபதி முன், கையில் நெருப்பை வைத்துக் கொண்டு சத்தியம் செய்வது வழக்கம். அதுபோல நடராஜப்பெருமானும் நம்மிடம் நெருப்பின்மீது சத்தியம் செய்கிறார். என்னை நம்பி தஞ்சமடைந்தவர் களைக் காத்து அருள்வேன் என்று உறுதி யளிக்கிறார். திருவாதிரை நாளில் அவரை வணங்குவோர் நல்வாழ்வு பெறுவர்.