பதிவு செய்த நாள்
29
மார்
2013
10:03
சங்ககிரி: சங்ககிரி ஆர்.எஸ்., நாட்டுவம்பாளையம் தங்கமாரியம்மன் கோவில் திருவிழா நடத்த, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சங்ககிரி அருகே உள்ள ஆர்.எஸ்.,நட்டுவாம்பாளையத்தில், 150 ஆண்டு பழைமையான தங்கமாரியம்மன் கோவில் உள்ளது. அனைத்து சமுதாயத்துக்கும் பாத்தியப்பட்ட இந்த கோவிலை, குறிப்பிட்ட ஒரு சமுதாய மக்கள் நிர்வகித்து வந்தனர். மற்ற சமுதாயத்தை சேர்ந்தவர்கள், கோவிலில் வழிபட அனுமதி மறுக்கப்பட்டது. கோவில் விழா நடத்துவதில், இரண்டு பிரிவினருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழ் கொண்டு வரப்பட்டு, செயல் அலுவலர் நியமிக்கப்பட்டார். மேலும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் சீராய்வு மனு தாக்கல் செய்ததால், விசாரணை முடியும் வரை, தற்போதைய நிலை தொடர உத்தரவிடப்பட்டது. குறிப்பிட்ட சமுதாய மக்கள் நடத்தும் திருவிழாவில், மற்ற சமுதாய மக்களை அனுமதிக்க வேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்கையை,தொடர் செய்தி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, பங்குனி மாத திருவிழாவை இந்து சமய அறநிலையத்துறை நடத்துவம் விதமாக, சிறப்பு தனி அலுவலர் மற்றும் சிறப்பு பணியாளர்களை நியமனம் உதவி ஆணையர் ராமு உத்தரவிட்டுள்ளார். வெண்ணங்குடி முனியப்பன் கோவில் தனி அலுவலர் திருஞான சம்பந்தம், சங்ககிரி சரக வருவாய் ஆய்வாளர் மணிமேகலை, கஞ்சமலை மற்றும் கோவில் செயல் அலுவலர் ராஜகோபால் உள்பட, 14 பேர் கொண்ட குழு மூலம் பங்குனி மாத விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரச்னை எழாத வண்ணம் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது.