Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » பகழிக்கூத்தர்
பகழிக்கூத்தர்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 மார்
2013
02:03

ராமநாதபுரம் ராமேஸ்வரம் ஆகிய தலங்களை உள்ளடக்கிய பகுதி சேதுநாடு என்று அழைக்கப்படுகிறது. அங்கு, அமைந்துள்ள கடலோரத் திருத்தலம் திருப்புல்லாணி என்னும் தர்ப்பசயணம் ஆகும், சீதாதேவியைத் தேடி வரும் வழியில், கருணைக் கடலான ஸ்ரீராமன் கருங்கடலை நோக்கி தருப்பைப் புல்லை படுக்கையாகக் கொண்டு கிடந்த காரணத்தால், இங்குள்ள ராமபிரானுக்கு தர்ப்ப சயன ராமன் என்று பெயர். கடல் அரசன் தன் தேவியருடன் ஸ்ரீராமனிடம் சரண் அடைந்த இடம் இந்தத் தலம். இதற்கு அருகில் வீர நாராயண சதுர்வேத மங்கலம் என்னும் பெயருடைய ஊர், வேத விற்பன்னர்களுக்கு இறையிலியாகக் கொடுக்கப்பட்டது. இந்த ஊர் சன்னாசிக் கிராமம் என்றும் அழைக்கப்பட்டது.  இந்தக் கிராமத்தில், திருப்புல்லாணிப் பெருமாளிடம் பக்தி மிக்க வைணவராகிய தர்ப்பாசனர் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் ஒருமுறை தமது மனைவியுடன் தல யாத்திரை சென்றார். அப்போது, புகலூர் என்னும் தலத்தில் பிரசித்திபெற்று விளங்கும் அய்யனார் கோயிலைத் தரிசனம் செய்தார் அந்த அய்யனாருக்கு பகழிக் கூத்தர் என்று பெயர். ஆலய தரிசனத்தின்போது சாமியாடிய அந்தக் கோயில் அர்ச்சகர், இவர் கையைப் பிடித்து, உமக்கு ஒரு மகன் பிறப்பான். அவன் பிள்ளைக்கவி புனைவான் என்று கூறி திருநீறு அளித்தார். சில காலம் கழித்து, தர்ப்பாசனர் தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. புகலூர் அய்யனார் கோயில் அர்ச்சகர் கூறியது நினைவுக்கு வர. அந்த அய்யனாரின் திருப்பெயரான பகழிக்கூத்தர் என்னும் திருநாமத்தையே அந்தக் குழந்தைக்குச் சூட்டினர்.

பகழிக்கூத்தர் இளம் வயதிலேயே வடமொழி, தென்மொழி, வேதம், புராணங்கள் பயிற்சி பெற்றவராகத் திகழ்ந்தார். அவருக்குக் கல்வியறிவு பயிற்றுவித்த தமிழாசிரியர், தமிழ் மொழி இலக்கணத்தையும் நன்கு போதித்தார். அதன் பலனாக இளம் வயதிலேயே வரகவியாகவும், அறிவில் சிறந்தவராகவும், சேது சமஸ்தான அரசர் போற்றும் பெருமை பெற்றவராகவும் திகழ்ந்தார் பகழிக்கூத்தர். அக்காலத்தில், ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியைத் தமிழ்ப் புலவர்கள் மிகவும் விரும்பிப் படிப்பது வழக்கம். பகழிக் கூத்தரும் அதை நன்கு கற்றுத் தேர்ந்தார். அதன் சுவையை மற்றவர்களும் எளிதில் உணர வேண்டும் என்ற எண்ணத்தோடு சீவக சிந்தாமணி சுருக்கம் என்னும் 300 விருத்தப் பாக்களால் ஆகிய நூலை இயற்றினார். அந்த நூலில் செம்பிநாட்டு வீரநாராயணச் சதுர்வேத மங்கலம் விளக்க வந்த நெடுமால் வேதியர் குலாதிபதி தர்ப்பாதனன் புதல்வன் மிக்க பகழிக் கூத்தனே என்று இவரது ஊரைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.

ஒருமுறை பகழிக்கூத்தர் வயிற்றுவலியால் மிகவும் வருந்தினார். மணி, மந்திரம், மருந்து முதலிய எதனாலும் நோய் நீங்கப் பெறாது வேதனையடைந்தார். அதையடுத்து, கலியுக வரதனாகிய செந்திற் கந்தப்பெருமான் கருணையை வேண்டி உருகி வழிபட்டார். திருச்செந்திலாண்டவன் சன்னதியில் நிற்பது போலும், அவனைப் பாடிப் பரவுவது போலும் மனத்தில் ஓர் அருட்காட்சி வந்தது. அன்றிரவு அவரது கனவில் தோன்றினார் கந்தவேள். இலை விபூதியையும் சீட்டு ஒன்றையும் தந்து மறைந்தருளினார். திடுக்கிட்டு விழித்தெழுந்த பகழிக்கூத்தர் முருகப்பெருமான் கனவில் விழங்கிய அருட்பிரசாதம், அருகில் இருக்கக் கண்டு மேலும் வியந்தார். விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டார். சீட்டைப் படித்துப் பார்த்தார். அந்தச் சீட்டில்,

பூமாது போற்றும் புகழ்ப் பகழிக் கூத்தா உன்
பாமாலை கேட்க யாம் பற்றேமா- ஏமம்
கொடுக்க அறியேமா கூற்றுவின் வாராமல்
தடுக்க அறியே மாதாம்!

என்று ஒரு வெண்பா எழுதப்பட்டு இருந்தது. புகலூர் அய்யனார் கோயில் சன்னதியில் அர்ச்சகர் தம் தந்தையாரிடம் கூறிய செய்தியை அவர் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தார். இப்போது அது அவரது நினைவுக்கு வந்தது. அக்கணமே திருச்செந்தில் ஆண்டவன் மீது செந்தமிழில் பிள்ளைத்தமிழ்ப் பாட வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு மேலிட்டது. முருகப்பெருமான் எழுதித் தந்த வெண்பாவில் இருந்தே பூமாது என்று தொடங்கும் சொல்லை முதல் சொல்லாக வைத்துப் பாடத் தொடங்கினார். பிள்ளைத் தமிழ்ப் பாடி நிறைவு செய்தவுடன், நெடுநாள் அவரைப் பற்றியிருந்த வயிற்றுவலியும், வினைநோயும் நீங்கி இன்புற்றார். தாம் இயற்றிய பிள்ளைத்தமிழை திருச்செந்தூர் முருகன் சந்நிதானத்தில் அரங்கேற்றி மகிழ எண்ணம் கொண்டு, அங்கு சென்றார் பகழிக்கூத்தர். கோயில் நிர்வாகிகள். அர்ச்சகர்கள் ஆகியோரிடம் தமது விருப்பத்தைத் தெரிவித்தார். அவர்களும் சம்மதித்து அதனை அரங்கேற்றம் செய்ய ஏற்பாடு செய்தார்கள். பிள்ளைத்தமிழ்ப் பாக்களின் இனிமையையும் பொருள் நயத்தையும் அனைவரும் அனுபவித்தனர். ஆனால் அரங்கேற்றம் செய்து முடித்த பின் கோயில் சார்பில் அவரைப் பாராட்டி வாழ்ந்த ஒருவரும் முன்வரவில்லை. அந்த நாட்களில் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரபட்டினம் என்னும் ஊரில் காத்தபெருமாள் மூப்பனார் என்பவர் மிகப்பெரிய செல்வந்தராக இருந்தார். முருகப்பெருமான் மீது மிகவும் பேரன்புடையவர் இவர். அன்றிரவு முருகப்பெருமான் அவரது கனவில் தோன்றி, பகழிக்கூத்தரது பிள்ளைத்தமிழ் பாடலுக்குத் தக்க பாராட்டும் மரியாதையும் செய்யுமாறு அறிவுறுத்தினார். கந்தவேளின் திருவருளை எண்ணிப் பெருமகிழ்வுற்ற காத்தபெருமாள், உடனே பல்லக்கில் புறப்பட்டு திருச்செந்தூரை அடைந்தார்.

இது ஒருபுறம் இருக்க, திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் அரங்கேற்றம் செய்த அன்றிரவு தம் வாழ்நாளில் இறைவனுக்குத் தமிழ் பணியாற்றிய துயில் கொண்டார். ஆனால் முருகப்பெருமானுக்கோ இந்த நூலைப் பாராட்டித் தக்க பரிசை ஒருவரும் அளிக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டது போலும்! உடனே தமது மார்பில் இருந்த மாணிக்கப் பதக்கத்தை பகழிக்கூத்தரின் தமிழ்ப் புலமைக்குப் பரிசாக அவரது மார்பில் அணிவித்தார். நன்கு உறங்கிய நிலையில் நடந்தது எதையும் பகழிக்கூத்தர் உணரவில்லை. மறுநாள் காலையில் செந்திலாண்டவன் சந்நிதிக்கு வந்த கோயில் அர்ச்சகர்கள் இறைவன் மார்பில் திகழும் மாணிக்கப் பதக்கத்தைக் காணாது கலங்கினார். அங்கும் இங்கும் ஓடித் தேடினர். அப்போது, கோயிலின் ஒரு புறத்தே படுத்து உறங்கிக்கொண்டிருந்த பகழிக்கூத்தரது கழுத்தில் அந்தப் பதக்கம் பிரகாசிப்பதைக் கண்டனர். முதல்நாள் பிள்ளைத்தமிழ் அரங்கேற்றம் முடிந்தபின் அவரை முறையாகப் பாராட்டாததைக் கண்டு, முருகப்பெருமானே இந்தத் திருவிளையாடலைப் புரிந்தான் என்பதை உணர்ந்தனர். இந்நிலையில், குலசேகரபட்டினம் காத்தபெருமாள் திருச்செந்தூர் கோயிலை அடைந்தார். அப்போது பதக்கம் காணாமல் போனதும், அதனை இறைவன் பகழிக்கூத்தருக்கு அணிவித்த அற்புதத்தையும் அறிந்து மகிழ்ந்தார். புலவரின் திருவடிகளைப் பணிந்து, கந்தவேள் கனவில் சொன்ன செய்தியை உரைத்தார்.

பகழிக்கூத்தர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இறைவனது பெருங்கருணைத் திறத்தை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். கூடியிருந்தோர் அனைவரும் செந்திலாண்டவன் திருவருட் திறத்தையும், அவனது தமிழ் தாகத்தையும் வாழ்த்திப் போற்றினர். பகழிக்கூத்தருக்கு செந்தில்கந்தன் அளித்த மாணிக்கப் பதக்கத்துக்கு ஈடாக பொன்னாடை அணிவித்து, பொன்னும் பொருளும் வழங்கிச் சிறப்பித்தார் செல்வந்தரான காத்தபெருமாள். முருகப்பெருமானின் அருளால் புகழ்பெற்ற புலவர் திலகமான பகழிக்கூத்தர் திருச்செந்தூர்ப் பதியிலே பல ஆணடுகள் வாழ்ந்து, பிறகு தமது புகழ் உடம்பை நிலைநிறுத்தி, கந்தன் கழலினைச் சேர்ந்தார்.

தீரொணா வயிற்று நோயுந் தீர்த்திடச் செந்திற்பிள்ளை
பேர்பெறு தமிழைப் பாடிச் செம்மலின் பதக்கம் பெற்றோன்
வீரநா ராயணத்து வேதமங் கலச் சன்னாசி
ஊர்தரு பகழிக்கூத்தர் ஒண்கழல் ஓங்கிவாழி!

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar