பதிவு செய்த நாள்
01
ஏப்
2013
10:04
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக் கோவில், சரியான நேரத்திற்கு திறக்கப்படாததால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர். திருக்கழுக்குன்றத்தில், நான்கு வேதங்களால் உருவான மலை மீது, திரிபுர ”ந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் மலைக் கோவில்அமைந்துள்ளது. இக்கோவில் தினமும் காலை குறித்த நேரத்தில் திறக்கப்படுவதில்லை. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், கோவில் எப்போது திறக்கும் எனத் தெரியாமல் காத்திருக்க வேண்டியுள்ளது.
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:மலைக்கோவில் தினமும் காலை 9:00 மணியிலிருந்து, பகல் 1:00 மணி வரையிலும், மாலை 5:00 மணியலிருந்து இரவு 7:00 மணி வரையிலும் திறக்கப்பட வேண்டும். விசேஷ நாட்களில், பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தால், கோவில் சற்று நேரம் கூடுதலாக திறந்திருக்கும். கடந்த சில நாட்களாக, கோவில் 9:00 மணிக்கு திறக்கப்படுவதில்லை. காலை 10:30 மணி அல்லது 11:00 மணிக்கு திறக்கப்படுகிறது.கோவிலுக்கு வரும் பக்தர்கள், அறிவிப்பு பலகையில், கோவில் திறப்பு நேரம் 9:00 மணி எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால், அதை நம்பி, 650 படிகள் ஏறி மலைக்கு செல்கின்றனர். அங்கு கோவில் மூடியிருப்பதைக் கண்டு ஏமாற்றம் அடைகின்றனர். இதை தவிர்க்க, குறித்த நேரத்தில் கோவிலை திறக்க, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.