பதிவு செய்த நாள்
01
ஏப்
2013
10:04
ஈரோடு: ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் பங்குனி குண்டம் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, மார்ச், 19ம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது.
ஈரோடு, பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில் கோவில்களில், தினமும் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஞாயிற்று கிழமையான நேற்று, ஈரோடு நகரம், கருங்கல்பாளையம், குமலன்குட்டை, சம்பத் நகர், கிருஷ்ணம்பாளையம், நாட்ராயன்கோயில் ஆகிய பகுதிகளில் உள்ள நூற்றுக் கணக்கன பக்தர்கள், தனித்தனி குழுவாக கோவிலுக்கு அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும், பால் குடம், தீர்த்தக் குடம், உருள் தண்டம் போடுதல் ஆகிய வகைகளில் நேர்த்திக்கடன் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெவ்வேறு பகுதிகளில் இருந்து பெரியமாரியம்மன் கோவிலில் குவிந்ததால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. கோவில் வளாகத்தில், அதிகாலை முதலே பக்தர்களுக்கு, அன்னதானம், டிபன், பொங்கல், நீர்மோர் வழங்கப்பட்டது. அம்மனை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசித்துவிட்டு சென்றனர்.
* அலகு குத்துவதில் முன் அனுபவம் உடையவர்களை கொண்டு, வழக்கமாக கன்னம், முதுகு, நாக்கு, தொடை ஆகிய பகுதிகளில் அலகு குத்தப்படும். பார்வையாளர்களை மிரட்சியடைய செய்யும் வகையில், 12 முதல் 15 அடி நீளமான கம்பியை கன்னத்தில், தொண்டையில் குத்திக் கொண்டு சென்றனர். பெண் பக்தர்கள் நாக்கு, முதுகு ஆகிய இடங்களில் அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர். சில முரட்டு பக்தர்கள், கன்னம், முதுகு பகுதிகளில் அலகு குத்திருந்தனர், இந்தாண்டு கழுத்தில் அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தியது, கோவில் இருந்த பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.