பதிவு செய்த நாள்
09
ஏப்
2013
10:04
தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும், தமிழ் புத்தாண்டு தினத்தை, விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டும் என, அரசு அறிவித்துள்ளது. பல நூற்றாண்டு காலமாக, ஏப்ரல் 14ம் தேதியே, தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. கடந்த, தி.மு.க., ஆட்சியில், தை முதல் நாளை, புத்தாண்டு தினமாக கொண்டாட, அரசாணை வெளியிடப்பட்டு கொண்டாடப்பட்டது. பின், அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், "ஏப்ரல் 14ம் தேதியே தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படும் என, அரசாணை வெளியிட்டு, கொண்டாடப்படுகிறது.அதன்படி, இம்மாதம், 14ம் தேதி, தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, அனைத்து கோவில்களிலும், புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என, அனைத்து இணை ஆணையர்களுக்கும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆணை பிறப்பித்துள்ளார். சமீபத்தில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், புத்தாண்டுக்கான கொண்டாட்டங்களுக்கான முன்னேற்பாடுகளில், இப்போதிருந்தே ஈடுபட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை:
*புத்தாண்டுக்கு முதல் நாள் மாலையே, கோவில்களில் மின் விளக்கு அலங்காரம் செய்ய வேண்டும்.
* அன்றிரவு, அதிகளவில் பக்தர்களின் வருகையின் முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
* நள்ளிரவில், பக்தர்கள் எந்தவித இடையூறுமின்றி தரிசனம் செய்யும் வகையில் முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்.
* மாவிலை தோரணங்கள் கட்ட வேண்டும்.
* கோவிலின் நுழைவாயின் இருபுறமும், வாழைமர தோரணம் அமைக்க வேண்டும்.
* புத்தாண்டு அன்று, சிறப்பு அன்னதானம் நடத்த வேண்டும். அவற்றில், லட்டு, சர்க்கரை பொங்கல், புளியோதரை போன்றவற்றை வழங்க வேண்டும்.
* சிறப்பு ஆன்மிக சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. - நமது நிருபர் -