பதிவு செய்த நாள்
09
ஏப்
2013
10:04
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில், தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது.காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில், பங்குனி மாத பிரம்மோற்சவம், கடந்த 2ம் தேதி காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல், தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில், வெவ்வேறு வாகனங்களில், சுவாமி வீதியுலா நடந்தது. பிரபல உற்சவமான கருடசேவை, கடந்த 4ம் தேதி காலை, நடந்தது.ஏழாம் நாள் திருவிழாவான நேற்று காலை, தேரோட்டம் நடந்தது. காலை 5:45 மணிக்கு, பெருமாள், மேளதாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, பக்தர்கள் புடை சூழ, கோவிலில் இருந்து புறப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். தீபாராதனை முடிந்து, காலை 7:00 மணிக்கு, பக்தர்கள் வடம் பிடிக்க, தேரோட்டம் துவங்கியது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன், "கோவிந்தா "கோவிந்தா என, கோஷம் எழுப்பினர்.ஆடி அசைந்தபடி புறப்பட்ட தேர், டி.கே.நம்பித் தெரு, செட்டித் தெரு வழியாக, வரதராஜ பெருமாள் கோவில் சன்னிதி தெரு சென்றது. காலை 9:00 மணிக்கு, தேர் நிலையை வந்தடைந்தது. வழிநெடுகிலும், பக்தர்கள் திரண்டு நின்று, பெருமாளை வழிபட்டனர். எட்டாம் நாள் திருவிழாவான, இன்று மதியம் 2:00 மணிக்கு, தொட்டி திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு குதிரை வாகன உற்சவம் ஆகியவை வெகு சிறப்பாக நடைபெற உள்ளன.