பதிவு செய்த நாள்
09
ஏப்
2013
10:04
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், வரும் 23ம் தேதி நடக்கிறது. கட்டண சீட்டு பெற, மாதிரி விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மீனாட்சி அம்மன் கோயிலில், சித்திரை திருவிழா, முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம், ஏப்., 23ல், காலை, 8:17 முதல், 8:47 மணி வரை நடக்கிறது. திருக்கல்யாணத்தை பொது மக்கள் தரிசனம் செய்ய வசதியாக, தெற்கு கோபுரம் வழியே, 6,000 பக்தர்களுக்கு, "முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில், இலவச தரிசன அனுமதி வழங்கப்படும். வடக்கு கோபுரம் வழியே, 4,000 பக்தர்களுக்கு, 500 ரூபாய் கட்டணத்திலும், மேற்கு கோபுரம் வழியே, 1,500 பக்தர்களுக்கு, 200 ரூபாய் கட்டணத்திலும், அனுமதி உண்டு. கட்டணம் செலுத்தி, அனுமதி சீட்டு பெற விரும்புபவர்கள், "செயல் அலுவலர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், மதுரை என்ற முகவரிக்கு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், ஓட்டுனர் உரிமம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றில், ஏதாவது ஒன்றின் நகலுடன், மொபைல் எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி, வரும், 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன் லைனில், www.maduraimeenakshi.org என்ற முகவரியிலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர், தேவைப்படும் கட்டண சீட்டு எண்ணிக்கையை குறிப்பிட்டு, விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பரிசீலித்து, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்பப்படும். தகவல் வந்த பின், விண்ணப்பதாரரின் ஒரிஜினல் அடையாள அட்டையை கோயில் அலுவலகத்தில் காண்பித்து, திருக்கல்யாணத்துக்கான நுழைவு சீட்டை பெற்றுக் கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வெள்ளைத் தாளில், பெயர், முகவரி எழுதி, சான்று நகல் இணைத்து, மொபைல் எண்ணை குறிப்பிட்டு , 500 ரூபாய் மதிப்பிலான கட்டண சீட்டுகளின் எண்ணிக்கை, 200 ரூபாய் மதிப்பிலான கட்டண சீட்டுகளின் எண்ணிக்கை, நாள், இடம் ஆகியவற்றை குறிப்பிட்டு, கையொப்பமிட்டு விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. திருக்கல்யாண கட்டணச் சீட்டு வழங்குவது குறித்த இறுதி முடிவு, கோயில் நிர்வாகத்தை பொறுத்தது.