பதிவு செய்த நாள்
11
ஏப்
2013
11:04
திருப்பூர்: திருப்பூரில், கோவில் வீதிகள் அசுத்த மடைந்து காணப்படுவதால், பக்தர்கள், அருவெறுப்படைகின்றனர். திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், விஸ்வேஸ்வரர் கோவில், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில்கள் உள்ளன. பிரசித்தி பெற்ற இக்கோவில்களில், பக்தர்கள் கூட்டம் தினமும் காணப்படுகிறது. விஸ்வேஸ்வரர் கோவில் பகுதியில் உள்ள வீதிகளில், சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. பூ மார்க்கெட் வீதியில் இருந்து கோவில் இருபுறமும் வரும் சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் பை, கிழிந்த அட்டை பெட்டிகள், பிளாஸ்டிக் பொருட்கள், அழுகிய பூக்கள், கெட்டுப்போன உணவு போன்றவை கொட்டப்பட்டு, கழிவுநீர் தேங்கியுள்ளது. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், சஷ்டி உள்ளிட்ட விரத தினங்கள், சுப முகூர்த்த தினங்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது; வெளியூரை சேர்ந்த பக்தர்களும், கோவிலுக்கு அதிகமாக வருகின்றனர். கோவிலுக்குச் செல்லும் வீதிகள், கோவிலின் வெளிப்புற பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதால், பக்தர்கள் அருவெறுப்படைகின்றனர். கோவில் பகுதியை சுகாதாரமாக பராமரிக்காதது, பக்தர்கள் இடையே குமுறலை ஏற்படுத்தியுள்ளது. கோவில் பகுதிகள், வீதிகளை சுகாதாரமாக பராமரிக்க, மாநகராட்சி நிர்வாகம் அக்கறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; கோவிலுக்கு அருகே உள்ள கடைக்காரர்கள், கோவில் உள்ள பகுதியை சுகாதாரமாக வைத்திருக்க ஒத்துழைக்க வேண்டும்; குப்பையை கோவில் பகுதியில் கொட்டாமல் தவிர்க்க வேண்டும்.