பதிவு செய்த நாள்
12
ஏப்
2013
10:04
சென்னை :சென்னையில் தெலுங்கு வருடப் பிறப்பு நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழக கவர்னர் ரோசய்யா, கன்னியகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார். விஜய நாமம் எனப்படும் தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி பண்டிகை, நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் தெலுங்கு மொழி பேசுவோர் அதிகம் வசிக்கும், சவுகார்பேட்டை, சூளை, திருவள்ளூர், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் யுகாதி விமரிசையாக கொண்டாடப்பட்டது. தி.நகர் திருப்பதி தேவஸ்தானம், கொத்தவால்சாவடி கன்னியகா பரமேஸ்வரி இரண்டு கோவில்களிலும் நேற்று கவர்னர் ரோசய்யா குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார். கோவில்களில், பக்தர்களுக்கு சர்க்கரை மற்றும் வெண் பொங்கலுடன் யுகாதி பச்சடியும் வழங்கப்பட்டது.யுகாதி பச்சடி குறித்து, பாடியநல்லூரை சேர்ந்த சங்கர் கூறுகையில், ""யுகாதியின் போது, அறுசுவை கொண்ட பச்சடி ஒன்று பரிமாறப்படும். இந்த பச்சடியை ஆண்டுக்கு ஒரு முறை சாப்பிடுவது நல்லது. பச்சடியில், இனிப்புக்கு வெல்லம், புளிப்புக்கு புளி தண்ணீர், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், காரத்திற்கு மிளகு மற்றும் உப்பு சேர்த்து வழங்கப்படும். இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது, என்றார்.