பதிவு செய்த நாள்
12
ஏப்
2013
11:04
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் பூக்குழி விழாவில், பக்தர்கள் பூக்குழி இறங்கி, நேர்த்தி கடன் செலுத்தினர். நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்டிற்கு பாத்தியப்பட்ட, முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா, கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காமதேனு, அன்னம் உள்ளிட்ட வாகனங்களில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். எட்டாம் நாள் விழாவாக பொங்கல் விழா நடந்தது. பெண்கள் கோயிலின் முன்பு பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர். விரதம் இருந்த பக்தர்கள்,ஒன்பதாம் நாள் விழாவன்று, முளைப்பாரி, 51, 101 அக்னி சட்டிகள் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து ஆண், பெண் பக்தர்கள் ஏராளமானோர் பூக்குழி இறங்கினர். பங்குனி பொங்கலை முன்னிட்டு, எஸ்.பி.கே., ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது.