பதிவு செய்த நாள்
17
ஏப்
2013
11:04
புதுச்சேரி: காரைக்கால் அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு அதிகாரிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர். காரைக்கால் அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் மற்றும் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 25ம் தேதி காலை நடக்கிறது. கும்பாபிஷேக விழா, வரும் 21ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது. வரும் 22ம் தேதி காலை கோ பூஜை, மாலையில் முதற்கால யாகம், 23ம் தேதி காலை இரண்டாம் கால யாகம், தங்க விமான கலச வீதியுலா, இரவு மூன்றாம் கால யாக பூஜை, தீபாராதனை, 24ம் தேதி நான்காம் கால யாக பூஜை, மாலை ஐந்தாம் கால யாகம் நடக்கிறது. வரும் 25ம் தேதி அதிகாலை ஆறாம் கால யாக பூஜை, 7.30 மணிக்கு கடம் புறப்பாடு நடக்கிறது. அதைத் தொடர்ந்து சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், பத்ரகாளியம்மன் கோவில் விமானம், ராஜகோபுர தங்க கலச கும்பாபிஷேகம், பத்ரகாளியம்மன் மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது. கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு, சிவா எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மோகன்தாஸ், திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜன் வீராசாமி ஆகியோர் முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து, முறைப்படி அழைப்பிதழ் கொடுத்தனர்.