பதிவு செய்த நாள்
18
ஏப்
2013
11:04
திற்பரப்பு: காளிமலை திருப்பயணத்தில் இந்த ஆண்டு மூன்று லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக, நிருபர்கள் சந்திப்பின்போது டிரஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்தனர். வரலாற்றுச் சிறப்பு மிக்க பத்துகாணி காளிமலை சித்ரா பவுர்ணமி விழா நாளை(19ம் தேதி) துவங்குகிறது. வரும் 25ம் தேதி பிரசித்தி பெற்ற பொங்கல் விழா நடக்கிறது. 3 ஆயிரத்து 500 அடி உயர மலை உச்சியில் நடக்கும் விழாவிற்கு, ஆண்டுதோறும் பக்தர்களின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. இவ்வாண்டு விழா ஏற்பாடுகள் குறித்து மத்திய விழாக்குழு தலைவர் சுதர்சன் களியலில் நிருபர்களிடம் கூறியதாவது: வரம்பொதி காளிமலை திருப்பயணம் நாளை துவங்கி, வரும் 25ம் தேதி சித்ரா பவுர்ணமி பொங்காலையுடன் நிறைவு பெறுகிறது. கடந்த ஆண்டு ஒரு லட்சம் பெண்கள் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு விழாவில், மூன்று லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. பஞ்., மூலம் குடிநீர் வினியோகம் செய்யவும், சுகாதாரத்துறை மூலம் விழா நாட்களில் மருத்துவ சேவை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொங்காலை நாளில் காலை முதல் அன்னதானம் வழங்கவும், மலை ஏறும் பகுதியில் ஐந்து இடங்களில் இடைதாவளம் அமைத்து குடிநீர் மற்றும் மருத்துவ சேவை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க, போக்குவரத்துத்துறை மூலம் ஏற்பாடு செய்யப்படும். கடந்த ஆண்டு குமரி மாவட்ட சிறப்பு பஸ்கள் அதிகாலையில் இயக்கப்படாததால், பொங்கலுக்கு வந்த பக்தர்கள் சிரமப்பட வேண்டி வந்தது. இந்த ஆண்டு அதிகாலை முதல் பஸ்கள் இயக்க அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். கேரள மற்றும் தமிழக போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. பொங்கலிட வருபவர்கள் சிறிய அளவில், பொங்கலிட தேவையான பொருட்களை மட்டுமே கொண்டு வந்தால் போதுமானது. இதனால், சிரமங்களை தவிர்க்கலாம். பொருட்களை மலைக்கு கொண்டு செல்ல விழாக்குழுவினர் உதவி செய்வர். இவ்வாண்டு குமரி மாவட்டம் மற்றும் கேரள மாநில கிராம கோõயில்களில் இருந்து பக்தர்கள் காப்பு கட்டி, விரதம் இருந்து மலை ஏறவும் ஏற்பாடுகள் உள்ளன. கடந்த 14ம் தேதி முதல் காப்பு கட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு சுதர்சன் கூறினார். இணை ஒருங்கிணைப்பாளர் முருகன், டிரஸ்ட் உறுப்பினர் ராஜ்குமார் உடனிருந்தனர்.