பதிவு செய்த நாள்
19
ஏப்
2013
09:04
ராமன் பொருள் தெரியுமா?: ராமனை "இராமன் என்று முழுமையாக எழுதுவர். "இரா என்றால் "இரவு. "மன் என்றால் "தலைவன். இரவுக்கு தலைவன் சந்திரன். சந்திரனைப் போல் குளிர்ந்த முகத்துடன் அருள்பவர் என்பதே ராமனின் பொருள். ஆம்...அவர் பறவைக்கும், குரங்குகளுக்கும், அணிலுக்கும் கூட அருள் செய்தவர். ராவணன் ஆயுதம் இழந்து நின்ற போது உயிர்பிச்சை தந்த கருணையாளர். வால்மீகி "ராம மந்திரத்தை "மரா என்றே உச்சரித்தார். அவர் "மரா..மரா..மரா என வேகமாகச் சொல்லும் போது, அது இயற்கையாகவே "ராம என மாறி விட்டது. "ராம மந்திரத்தை"மரா என்று சொல்ல ஆரம்பிப்பது இரட்டிப்பு பலன் தரும். "மரா என்றால் "போக்கடிப்பது, நீக்குவது என்று பொருள். பாவத்தைப் போக்கும் மந்திரம் ராம மந்திரம். "ராம என்று சொல்லும் போது, "ரா என்ற எழுத்துக்கு உதடுகள் திறக்கும். "ம என்ற எழுத்தின் உச்சரிப்பின் துவக்கத்தில் மூடிக்கொள்ளும். அதாவது, இந்த மந்திரத்தால் உள்ளிருந்து வெளியே சென்ற பாவம் மீண்டும் நம்மை அண்டுவதில்லை. உத்தமமான ராமநாமம் சொல்லுங்கள். வாழும் போது செல்வமும், பின் வைகுண்டப்பதவியும் பெற்று மகிழலாம்.
அம்மா உயிர் தப்பியது எப்படி?: ராமன் காட்டுக்குப் போனதை அறிந்து தந்தை தசரதர் மாண்டுவிட்டார். தாய் கோசலை உயிருடன் இருக்கிறாள். பெண்களுக்கு தானே இளகிய மனது...அவளல்லவா முதலில் இறந்திருக்க வேண்டும் என்று எண்ணத்தோன்றும். தனக்குப் பிறகு நாடாள பிள்ளைகள் வேண்டும் என்று தான் தசரதர் சுயநலத்துடன் யாகம் செய்தார். கோசலையோ, இந்த உலகத்தை ஆள ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொடுத்தாள். முன்னது சுயநலம், அடுத்தது பொதுநலம். தன்னலம் உள்ளவர்கள் அதிகநாள் உயிர் வாழ்வதில்லை. ராமன் அயோத்தியை ஆண்டால் என்ன! காட்டில் இருந்து அங்கிருப்பவர்களை ஆண்டால் என்ன என்று பொதுநலத்துடன் பிள்ளையைத் தியாகம் செய்தாள். ராமன் இருக்குமிடம் சீதைக்கு மட்டுமல்ல, கோசலைக்கும் அது தான் அயோத்தி, அதனால் தான், ராமனை காட்டுக்கு அனுப்பிய பின்பும் கோசலை உயிருடன் இருந்தாள்.
ராமரின் அக்கா: ராமபிரானுக்கு "சாந்தா என்ற மூத்த சகோதரி இருந்தாள். தசரதரின் பட்டத்து ராணிகளைத் தவிர, அவருக்கு அடங்கிய பல சிற்றரசர்கள், நல்லுறவு வேண்டி தங்கள் பெண்களை அவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தனர். அவர்களில் ஒருத்தியான அபர்ணாவின் மகளே சாந்தா. சாந்தாவுக்கு ஐந்து வயதான போது, அவளை விதர்ப்ப நாட்டு அரசனும், தன் தாய்மாமனாருமான ரோமபாதனுக்கு தத்து கொடுத்து விட்டார். தசரதரின் தாயான இந்துமதியின் சகோதரரே ரோமபாதன். குழந்தை இல்லாத அவர், சாந்தாவை தத்தெடுத்துக் கொண்டார்.
எதிர்க்கட்சித்தலைவரை திட்டாதீர்: ஆட்சியாளர்களுக்குரிய சம அந்தஸ்து எதிர்க்கட்சி தலைவருக்கு இருக்கிறது. ஆனால், இக்காலத்தில் ஆளுங்கட்சியினர், அவரைத் திட்டித் தீர்க்கிறார்கள். ராமபிரான் அப்படியல்ல! மனைவியை பத்துமாதம் கடத்தி வைத்திருந்த ராவணனைக் கூட திட்டாமல் ஐயா என்று மரியாதையுடன் அழைத்தார். ஆளையா! உனக்கு அமைந்தன மாருதம் என்று துவங்கும் கம்பராமாயணச் செய்யுளில் இந்த தகவல் இருக்கிறது. இதில் வரும் "ஆளையா என்ற சொல்லுக்கு "இலங்கையை ஆளும் ஐயாவே என்று பொருள். தமிழில் மிகுந்த மரியாதைக்குரிய சொல் ஐயா. இதற்கு "முதல்வர், "பெரியவர் என்று பொருள்.