பதிவு செய்த நாள்
19
ஏப்
2013
10:04
ஆண்டிபட்டி: மதுரை சித்திரை திருவிழாவிற்காக,வைகை அணையில் இருந்து, 626 மில்லியன் கன அடி நீர் நாளை(ஏப்ரல் 20) முதல் ஐந்து நாட்களுக்கு திறந்து விடப்படுகிறது. பருவ மழை பொய்த்ததால், கடந்த ஆண்டில் வைகை அணை நீர் மட்டம் அதிகபட்சமாக 59.19 அடி வரை மட்டுமே உயர்ந்தது. அணை உயரம் 71 அடி. கோடையின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, அணையில் இருந்த நீர் பாசனத்திற்கு திறந்து விடப்பட வில்லை. மதுரை, சேடபட்டி-ஆண்டிபட்டி கூட்டு குடிநீருக்காக, வினாடிக்கு 60 கன அடி வீதம் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது. நேற்று காலை, அணை நீர் மட்டம் 45.39 அடியாக இருந்தது. நீர் வரத்து வினாடிக்கு 39 கன அடியாக உள்ளது. ஏப்., 25ல், கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்குகிறார். இந்நிகழ்ச்சிக்காக, நாளை அணையில் இருந்து, தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தற்போது அணையில் 1444 மில்லியன் கன அடி இருப்பில் உள்ளது. ஏப்., 20 முதல் 25 முடிய, 5 நாட்களுக்கு, அணையில்இருந்து 626 மில்லியன் கன அடிநீர் திறக்கப்பட உள்ளது. அணையில் திறக்கப்படும் நீர், மதுரை சித்திரை திருவிழாவிற்கு பயன்படுவதுடன் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்யும். திறக்கப்படும் நீரால், வைகை மின் உற்பத்தி நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 144 மெகாவாட் மின் உற்பத்தி கிடைக்கும்,என்றனர்.