பதிவு செய்த நாள்
19
ஏப்
2013
11:04
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் நெய் விளக்கேற்றி வழிபாடு நடைபெற்றது. சிவபெருமான் அனைத்து கோவில்களிலும் லிங்க ரூபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். ஆனால் ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் உருவ ரூபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இக்கோவிலில், புதிய அறங்காவலர் மற்றும் உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பட்டனர். அதன்படி, தலைவராக மதுரெட்டி, உறுப்பினர்களாக ராமசந்திர நாயுடு, முருகேச ரெட்டி, வெங்கட கிருஷ்ணய்யா, வேதமுத்து, பாலாஜி, சுரேகா, மஞ்சு ஆகியோர் உறுப்பினர்களாக தேர்தெடுக்கப்பட்டனர். இவர்கள் நேற்று காலை, கோவிலில் உள்ள வால்மீகீஸ்வரர் சன்னதியில், உறுதி மொழி ஏற்றனர். சித்தூர் மாவட்ட கோவில்கள், உதவி ஆணையர் வெங்கடேஸ்வரலு, தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு நியமன பத்திரம் அளித்தார். சிவன் கோவில்களில் தனியாக வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி, இக்கோவிலில் கவுரி சமேத தாம்பத்ய தட்சிணாமூர்த்தியாய் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தட்சிணாமூர்த்திக்கு உகந்த வியாழக்கிழமையான நேற்று, பக்தர்கள் பெருமளவில் திரண்டனர். சிறப்பு அபிஷேக ஆராதனைக்கு பின்னர், மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் நெய் விளக்கேற்றி தாம்பத்ய தட்சிணாமூர்த்தியை வழிபட்டனர்.