பதிவு செய்த நாள்
19
ஏப்
2013
12:04
திருத்தணி: கோடை வெயிலின் தாக்கத்தால், திருத்தணி மலை கோவிலுக்கு வரும் பக்தர்களின் வருகை மிகவும் குறைந்துள்ளது. இதனால் கோவில் மற்றும் கோவில் பஜார் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். கடந்த இரண்டு நாட்களாக, வெயிலில் தாக்கம் அதிகமாக உள்ளது. அதாவது சராசரியாக, 100 டிகிரியை தாண்டி உள்ளது. இதனால் பக்தர்களின் வருகை குறைந்துள்ளது. மேலும், பக்தர்கள் காலை, 9:30 மணி வரையிலும், மாலை, 5:00 மணிக்கு பிறகும் வருகின்றனர். பொதுவாகவே கோடை காலங்களில், பகல் நேரத்தில், குறைந்த அளவில்தான் பக்தர்கள் மலை கோவிலுக்கு வருவர். தற்போது பகல் நேரத்தில், 200 முதல், 500 பக்தர்கள் வரையே தரிசனம் செய்கின்றனர். திருத்தணியை சுற்றி மலைப்பிரதேசமாக இருப்பதால், இங்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. சாலைகளில் நடக்க முடியாத அளவிற்கு, அனல் காற்று வீசுகிறது. இதனால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல், வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் கோவில் மற்றும் கோவில் பஜார் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாததால், வெறிச்சோடி காணப்படுகின்றன.