பதிவு செய்த நாள்
23
ஏப்
2013
11:04
திண்டிவனம்: திண்டிவனம் அருகே, வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது, சோழர் காலத்து தர்மதேவி சிலை கண்டெடுக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கிடங்கல் பகுதியை தலைநகராகக் கொண்ட ஒய்மா நாட்டை, சங்க காலத்தில், நல்லியக்கோடன் ஆட்சி புரிந்துள்ளார். அப்போது, கிடங்கல் பகுதியில் கோட்டை மற்றும் அகழிகள் இருந்துள்ளன. அதன் பின், சோழ மன்னர்கள் ஆட்சிபுரிந்த போது, கோட்டை இருந்த இடம் கோட்டைமேடாக பெயர் பெற்று, அங்கு, சமணர் கோவில் கட்டப்பட்டுள்ளது. காலப் போக்கில் கோட்டை அழிந்து, மண்ணில் புதையுண்டு போனது. இப்பகுதியில் கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது, கிடைத்த சமண ஐம்பொன் சிலைகள் சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த, சில தினங்களுக்கு முன், இப்பகுதியில் பொக்லைன் மூலம், வீடுகட்ட பள்ளம் தோண்டியபோது, சோழர் காலத்து தர்மதேவி கற்சிலை கிடைத்தது. இதுகுறித்து, தொல்லியல் ஆய்வாளர் முனைவர் ரமேஷ் கூறுகையில், ""இப்பகுதியில் சோழர் காலத்து சிலைகள் பல கிடைத்துள்ளன. தற்போது, கிடைத்துள்ள, தர்மதேவி சிலையில் மேல்பகுதியில், குடை, இரு புறமும் ஆண் உருவம், வலது கால் சிம்மத்தின் மீதும், இடதுகால் மடங்கிய நிலையிலும் உள்ளது. சிலைக்கு கீழ் பணிப் பெண் உருவம் உள்ளது, என்றார்.