பதிவு செய்த நாள்
25
ஏப்
2013
10:04
திருவெண்ணெய்நல்லூர்: கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில், சித்திரை பெருவிழா கோலகலமாக, நேற்று நடந்தது. விழுப்புரம் மாவட்டம், உ ளுந்தூர்பேட்டை, கூவாகம், கூத்தாண்டவர் கோவிலில், கடந்த, 9ம் தேதி, சாகை வார்த்தலுடன், சித்திரை பெருவிழா துவங்கியது. கடந்த, 23ம் தேதி இரவு, சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த திருநங்கைகள், பூசாரிகளின் கையால் தாலிக் கட்டிக் கொண்டு, இரவு முழுவதும் கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, அரவாண் சிரசுக்கு, கண் திறக்கப்பட்டது. கீரிமேட்டிலிருந்து புஜம், மார்பு; நத்தம் கிராமத்திலிருந்து கை, கால்கள் கொண்டு வந்து, 21 அடி உயர தேரில் பொருத்தினர். பின், சிவலிங்க குளம் கிராமத்திலிருந்து, குடை கொண்டு வரப்பட்டது. காலை, 7:40 மணிக்கு, தேரோட்டம் துவங்கியது. திருநங்கைகள், தேர் செல்லும் வழியில், 108 தேங்காய்கள் வைத்தும், குவியல் குவியல்களாக கற்பூரங்களை ஏற்றியும், கும்மியடித்து, ஆடிப் பாடினர். தேரோட்டத்தில், விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த பொருட்களை, சுவாமி மீது வீசினர். நத்தம், தொட்டி வழியாக, தேர், பந்தலடிக்குச் சென்றடைந்தது. பகல், 12:30 மணிக்கு, அழுகளம் நிகழ்ச்சி துவக்கியது. இதில், அரவாண் களபலி நடந்தது. இதைத் தொடர்ந்து, திருநங்கைகள், தாங்கள் அணிந்திருந்த தாலியை அறுத்தெறிந்து, கை வளையல்களை உடைத்து, விதவைக் கோலம் பூண்டு, ஒப்பாரி வைத்தனர். சிலர், தங்கத் தாலிகளை சுவாமிக்கு காணிக்கை செலுத்தினர். பின், அப்பகுதியிலுள்ள கிணற்றில் குளித்து, ஊருக்குத் திரும்பினர். இரவு 7:00 மணிக்கு, காளி கோவிலில் அரவாண் உயிர்ப்பித்தல் நிகழ்ச்சி நடந்தது. அரவாண் சிரசு மட்டும், பந்தலடிக்கு கொண்டு வரப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டது; நத்தம், தொட்டி வழியாக கோவிலுக்கு, எடுத்துச் செல்லப்பட்டது. நாளை, 26ம் தேதி, தர்மர் பட்டாபிஷேகத்துடன், சித்திரை பெருவிழா நிறைவடைகிறது.