தண்டுமாரியம்மன் கோவில் கம்பம் பிடுங்கல்: காவடி எடுத்து பக்தர்கள் நேர்ச்சை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2013 10:04
சத்தியமங்கலம்: தண்டுமாரியம்மன் கோவில் கம்பம் பிடுங்கும் விழாவில், பக்தர்கள் அக்னி காவடி எடுத்து வந்து தங்கள் நேர்த்தி கடனை நிறைவு செய்தனர்.சத்தியமங்கலம் வடக்குபேட்டையில் உள்ளது தண்டுமாரியம்மன் கோவில். இது பண்ணாரி மாரியம்மனின் சகோதரி என்று ஐதீகம் கூறுகிறது. தண்டுமாரியம்மன் கோவில் இந்தாண்டு குண்டம் விழா கடந்த, 24ம் தேதி காலை முடிந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு கோவிலுக்கு முன் நடப்பட்ட மெகா அளவு கம்பம் பிடுங்கும் விழா நடந்தது.விழாவை முன்னிட்டு, பக்தர்கள் அக்னி காவடி எடுத்து வந்து தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றினர். இதையடுத்து பிடுங்கப்பட்ட கம்பத்தை வாலிபர்கள் தங்கள் தோலில் சுமந்து, பவானி ஆற்றுக்கு எடுத்து சென்றனர். அங்கு கரையில் வைத்து கம்பத்துக்கு விஷேச பூஜை செய்தனர். பின் கம்பத்தை பவானி ஆற்றில் தண்ணீரில் விட்டனர்.நேற்று மாலை, கோவில் வளாகத்தில் நடந்த விளக்கு பூஜையில் பெண்கள் திரளாக பங்கேற்றனர். இன்று (27ம் தேதி) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. மே, 2ம் தேதி மறுபூஜையுடன் இந்தாண்டுக்கான குண்டம் விழா நிறைவடைகிறது.