பதிவு செய்த நாள்
30
ஏப்
2013
10:04
கம்பம்: கம்பத்தில் நடைபெற்று வரும் கவுமாரியம்மன் கோயில், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அக்னி சட்டி எடுத்தல் இன்று இரவு நடக்கிறது. இதற்காக இன்று பிற்பகல் முதல் புஸ்ஸ்டாண்ட் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுகிறது. தேனி மாவட்டத்தில், பிரசித்திபெற்ற கோயில்களில் வீரபாண்டி மற்றும் கம்பம் கவுமாரியம்மன் கோயில்கள் முக்கியமானவை. கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும், 22 நாட்கள் கொண்டாடப்படும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தவர்கள், மண்டகப்படி நடத்துவார்கள். அம்மன் விதவிதமாக அலங்கரிக்கப்பட்டு, வீதி உலா வருவார். கடந்த 16 ந் தேதி, செவ்வாய்கிழமை சாட்டுதல் செய்து கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி இன்று இரவு நடக்கிறது. இரவு துவங்கி நாளை புதன் கிழமை மாலை வரை அக்னிசட்டிஎடுக்கும் நிகழ்வு நடைபெறும். இதற்கென ஆயிரக்கணக்கான பக்தர்கள் தயாராகி வருகின்றனர். அக்னி சட்டி மட்டுமல்லாமல் உருண்டு கொடுப்பது, ஆயிரம் கண்பானை எடுப்பது, அலகு குத்தி காவடி எடுத்து வருவது, போன்ற வேண்டுதல்கள் நிறைவேற்றப்படும். அக்னிசட்டி எடுக்கும் நிகழ்ச்சியையொட்டி, இன்று பிற்பகல் முதல் நாளை இரவு வரை பஸ் ஸ்டாண்ட் வ.உ.சி., திடலுக்கு தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, போலீசார் அறிவித்து உள்ளனர்.