பதிவு செய்த நாள்
09
மே
2013
11:05
கோபிசெட்டிபாளையம்: கொடிவேரி பாசன பகுதி விவசாயிகள் மழை வேண்டி குடும்பத்துடன் வந்து, அணையில் முனியப்பன் ஸ்வாமிக்கு கிடாய் வெட்டி, தண்ணீரில் நின்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை விளங்குகிறது. பவானிசாகர் அணையின் மூலம் எல்.பி.பி., தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய பாசனங்கள் பயன்பெறுகின்றன. நான்கு பாசனங்களிலும், 2.5 லட்சம் ஏக்கரில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள் ஆகியவை பயிரிடப்படுகின்றன. பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகரி, தெங்குமரஹாடா, குந்தாலகெத்தை, பில்லூர், மொய்யாறு ஆகிய பகுதிகளில் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்தாகிறது. பவானிசாகர் அணையின் மொத்த கொள்ளளவு, 120 அடி, (32.8 டி.எம்.சி.,) தண்ணீர் தேக்கி வைக்கப்படுவதாக, பொதுப்பணி துறையினர் தெரிவிக்கின்றனர். மகராஷ்டிரா மாநில செயற்கை கோள் மூலம், பவானிசாகர் அணையை ஆய்வு செய்ததில், 3 டி.எம்.ஸி.,(9.4 அடி) தண்ணீர் குறைவாக உள்ளது தெரியவந்துள்ளது.ஐந்தாண்டுகளாக சரியான மழை இன்றி பவானிசாகர் அணை, அதன் முழு கொள்ளளவை எட்டாத நிலையில் உள்ளது. குறிப்பாக சென்ற இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால், பவானிசாகர் அணையின் நீர்மட்டம், 50 அடிக்குள்ளாகவே இருந்து வருகிறது. தண்ணீர் குறைவு காரணமாக பாசனப்பகுதிக்கு சுழற்சி முறை மற்றும் உயிர் நீர் மட்டுமே திறக்கப்படுகிறது.பருவமழை பொய்த்ததால், ஈரோடு மாவட்டத்தில், 10 முதல், 20 சதவீதத்துக்கும் குறைவான விவசாய பணிகள் நடக்கிறது. குறிப்பாக கோபி சுற்று வட்டாரத்தில் இரண்டு போகத்தில், 10 ஆயிரம் முதல், 15 ஆயிரம் டன் வரை நெல் சாகுபடி செய்யப்படும். வறட்சியால் நெல் சாகுபடியே இல்லாததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மழை வேண்டி, கொடிவேரி பாசன பகுதியை சேர்ந்த விவசாயிகள், தங்களது குடும்பத்துடன் கொடிவேரி அணையில் உள்ள முனியப்பன் ஸ்வாமி கோயிலில் பொங்கல் வைத்து, கிடாய் வெட்டியும், அணை நீரில் ஒரு மணி நேரம் நின்று சிறப்பு பிரார்த்தனையும் செய்தனர்.கொடிவேரி பாசன பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: பருவமழை பொய்ததால் பவானிசாகர் அணை நிரம்பாமல் உள்ளது. அணையை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் வறண்டு கிடப்பதால், விவசாயத்தை நம்பிய விவசாயிகள், செய்வதறியாமல் உள்ளனர். பாசனப்பகுதிகள் வறட்சியான பகுதியாக அறிவிக்கப்படாததால், அரசு வழங்கும் நிவாரணத்தொகையும் கிடைக்காது. அரக்கன்கோட்டை, தடப்பள்ளி பாசனத்துக்கு, 4.5 டி.எம்.சி., தண்ணீர் என்பது போதுமானதல்ல. இது குறித்து அரசிடம் கோரிக்கை வைத்தும், அரசு கவனம் செலுத்தவில்லை. இதனால் வருணபகவான் கண் திறக்க வேண்டும் என்பதற்காக அணையில் கிடாய் வெட்டி, சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளோம்.பருவ மழை காலங்களில் கோபி, பவானிசாகர் உள்ளிட்ட இடங்களில் சராசரியாக, 400 மில்லி மீட்டர் வரை மழை பெய்கிறது. பவானி ஆற்றில் ஒன்பது டி.எம்.சி., தண்ணீர் வரை வீணாக செல்கிறது.மழை காலங்களில் தண்ணீர் வீணாவதை தடுக்க, பவானி ஆற்றில் கொடிவேரி அணையின் கீழ் பகுதி, பங்களாபுதூர், ஆப்பக்கூடல், ஜம்பை உள்ளிட்ட ஐந்து இடங்களில் தடுப்பணை கட்டினால், ஒரு தடுப்பணைக்கு ஒரு டி.எம்.சி., தண்ணீர் வரை சேமிக்க முடியும். கோடை காலங்களில் பாசனப்பகுதிக்கு தேவையான தண்ணீர் வினியோகம் செய்ய வாய்ப்பாக இருக்கும், என்றார்.