பதிவு செய்த நாள்
14
மே
2013
10:05
* வாடகை பாக்கிதாரர்களுக்கு கிடுக்கிப்பிடி -கோவில் மனை குடியிருப்பவர்களுக்கு இலவச மனைப்பட்டா தரமுடியாது என, அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், அதிக வாடகை பாக்கி வைத்திருப்பவர்களை, ஆக்கிரமிப்பாளர்களாக கருதி, வெளியேற்றும், இந்து சமய அறநிலைத்துறை சட்டப் பிரிவு, 78ஐ பயன்படுத்த, அத்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், கோவில் மனை கட்டடங்களில், குடியிருப்பு பகுதிகளில், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக, புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, 2010ல், மனைகளுக்கு, புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான மனைகள் மற்றும் கட்டடங்களுக்கான நியாய வாடகை நிர்ணயம் செய்ய, நியாய வாடகை குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவின் மூலம், 2010ல், அற நிறுவனங்களுக்குச் சொந்தமான மனைகள் மற்றும் கட்டடங்களுக்கான வாடகை, நிர்ணயம் செய்யப்பட்டது. 1999, 2007, 2010 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அரசாணையின் வழிகாட்டுதலின் படி, வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது.
*அற நிறுவனங்களுக்குச் சொந்தமான கட்டடங்கள் மற்றும் மனைகளில் குடியிருப்பவர்களுக்கு, இடத்தின் நடைமுறை சந்தை வாடகை மற்றும் மதிப்பு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, சொத்தின் மதிப்பில், 0.1 சதவீதம், மாத வாடகையாக நிர்ணயிக்கப்பட்டது.
* இச்சலுகை, கோவில் மற்றும் இதர அற நிறுவனங்களுக்குச் சொந்தமான, மனை மற்றும் கட்டடங்களை, குடியிருப்புக்காக பயன்படுத்தி வரும், வாடகைதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும்; மற்ற இனங்களுக்கு பொருந்தாது. கடந்த, 1999, 2007ல் வெளியிடப்பட்ட அரசாணைகளின் படி, 2010ம் ஆண்டு இறுதிக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது; இதுவே இறுதியானது. பெரும்பாலான கோவில் நிலங்களில், வசிக்கும் வாடகை தாரர்கள், வாடகை நிர்ணயம் தொடர்பாக, அதிக வாடகை பாக்கியை நிலுவையில், வைத்திருந்தனர். மேலும், பல தலைமுறைகளாக, கோவில் மனைகளில் குடியிருந்து வருபவர்கள், சமீபகாலமாக, இலவச மனைப்பட்டா கோரி, தமிழக முதல்வரை சந்தித்தனர். இருந்தாலும், மானிய கோரிக்கையின் போது, அறநிலையத்துறை அமைச்சர், "அக்கோரிக்கையை பரிசிலிக்க முடியாது; அதிக வாடகை பாக்கி வைத்திருப்பவர்களை, ஆக்கிரமிப்பாளர்களாக கருதி, வெளியேற்ற வேண்டிய நிலைக்கு, அறநிலையத்துறை ஆளாகி உள்ளது என, குறிப்பிட்டார். தற்போது, அதிக பாக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலை, அறநிலையத்துறை சேகரித்து வருகிறது. இதில், அறநிலையத்துறை சட்ட பிரிவு, 78 ஐ பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இப்பிரிவின் படி, கட்டணம் செலுத்த மறுப்பவர்களை, ஆக்கிரமிப்பாளர்களாக கருதி, மனையிலிருந்து வெளியேற்ற, அறநிலையத் துறை இணை ஆணையர்களுக்கு முழு அதிகாரம் உண்டு. எனவே, இப்பிரிவை பயன்படுத்தி, ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற முடிவு செய்துள்ளது.