பதிவு செய்த நாள்
15
மே
2013
09:05
சென்னை: ""திருவண்ணாமலை மற்றும் ஸ்ரீரங்கத்தில் நாயன்மார், ஆழ்வார் நந்தவனங்கள் அமைக்கப்படும், என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்பு:பன்னிரு திருமுறைகள் மற்றும் நாலாயிர திவ்யப் பிரபந்தம் ஆகியவற்றை, பக்தர்களிடம் எடுத்துச் செல்லும் வகையில், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் வளாகத்தில், நாயன்மார்கள் பாடல்கள் கொண்ட கல்வெட்டு நந்தவனம் அமைக்கப்படும். இதேபோல், ஆழ்வார்கள் பாடல்களை கொண்ட கல்வெட்டு நந்தவனம், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலில் அமைக்கப்படும்.அன்னதானம் ; நடப்பாண்டில், 100 கோவில்களில் அன்னதான திட்டம் விரிவாக்கப்படும். இதற்கு, 37 லட்சம் ரூபாய் செலவாகும். மேலும், அறநிலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 1,006 கோவில்கள், அறநிலைத் துறை கட்டுப்பாட்டில் இல்லாத ஆதிதிராவிடர், பழங்குடியினரின், 1,006 கோவில்கள், கிராமங்களில், 1,006 சிறு கோவில்களுக்கு திருப்பணி மற்றும் குடமுழுக்கு, நடப்பாண்டில் நடத்தப்படும். இதற்காக, 11 கோடி ரூபாய் செலவிடப்படும்.கரூர், அரியலூர், பெரம்பலூர், நாகபட்டினம், தஞ்சை, நாமக்கல், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில், 5.61 கோடி ரூபாயில், உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்படும். ஓய்வூதியம்அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களில், 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து, 60 வயதடைந்த பூசாரிகளுக்கான ஓய்வூதியம், 750 ரூபாயிலிருந்து, 1,000 ரூபாயாக உயர்த்தப்படும். அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், ஓய்வு பெற்ற பணியாளர்களின் ஓய்வூதியம், 800 ரூபாயிலிருந்து, 1,000 ரூபாயாக அதிகரிக்கப்படும். கன்னியாகுமரி மாவட்ட கோவில் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிர்வாகத்துக்கு அளிக்கப்படும் மானியத் தொகை, 1 கோடி ரூபாயிலிருந்து, 3 கோடி ரூபாயாக உயர்த்தப்படும். தொன்மையான, 49 கோவில்கள், 22.50 கோடியில் புதுப்பிக்கப்படும். கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் இரணியல் கிராமத்தில் உள்ள, இரணியல் அரண்மனை, 3.85 கோடி ரூபாயில் புனரமைக்கப்படும். சுசீந்தரம் தாணுமாலைய சுவாமி கோவில் ராஜகோபுர சுவர் ஓவியங்கள் புதுப்பிக்கப்படும்.இவ்வாறு, ஜெயலலிதா கூறினார்.