பதிவு செய்த நாள்
15
மே
2013
10:05
ஸ்ரீபெரும்புதூர் : ஆதிகேசவப் பெருமாள் கோவில் குளத்தில், ஆண்டுதோறும் உயிர் பலி அதிகரித்து வருவதால், கம்பி வேலி அமைத்து, பராமரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.ஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் அருகே, மிகப்பெரிய பரப்பிலான திருக்குளம் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள், மாதந்தோறும் நடைபெறும் திருவாதிரை உற்சவம், பிரம்மோற்சவம் போன்ற விசேஷ நாட்களில், குளத்தில் நீராடி, சுவாமியை தரிசனம் செய்கின்றனர். இக்குளத்தில் நீராடி, சுவாமியை தரிசனம் செய்தால், சரும நோய்கள் தீரும் என்பது ஐதீகம். குளத்திற்கு, தடுப்புச் சுவர் இல்லாததால், ஆண்டுதோறும், சித்திரை பிரம்மோற்சவம் நடைபெறும் போது, பக்தர்கள் யாரேனும் ஒருவர் குளத்தில் மூழ்கி, இறப்பது வாடிக்கையாகி விட்டது. நேற்று முன்தினம், புதுச்சேரியை சேர்ந்த சிறுவன், குளத்தில் மூழ்கி இறந்தான். எனவே, விசேஷ நாட்கள் தவிர, இதர நாட்களில், பொதுமக்கள் குளத்தினை பயன்படுத்தாத வகையில், கம்பி வேலி அமைத்து, பராமரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.