பதிவு செய்த நாள்
18
மே
2013
10:05
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், உத்தரவு பொருளாக, நேற்று தண்ணீர் வைக்கப்பட்டது. இதனால், மழை பொழியும்; வறட்சி நீங்கும் என்ற நம்பிக்கை, பக்தர்களிடையே ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், சிவன் மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மழை வேண்டி நேற்று, திருவாசகம் முற்றும் ஓதும் நிகழ்ச்சி நடந்தது. கணியூர் திருவாசக அடிகள் தலைமையிலான குழுவினர், திருவாசகம் ஓதினர். அப்போது, வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த ஞானாம்பாள் என்ற பெண், "என் கனவில் வந்த சுப்ரமணி சுவாமி, உத்தரவு பொருளாக தண்ணீர் வைக்கும் படி கூறினார் என, கோவில் அதிகாரிகளிடம் தெரிவித்தார். அறநிலையத்துறை செயல் அலுவலர் தலைமையில் அதிகாரிகள், சுவாமியின் உத்தரவுக்காக, பூ போட்டு பார்த்து, அனுமதி வேண்டினர். அனுமதி கிடைத்ததையடுத்து, கோவிலில் உள்ள கண்ணாடி பேழையில், ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த பென்சில் பாக்ஸ் மாற்றப்பட்டு, குடுவையில் தண்ணீர் வைக்கப்பட்டது. அங்கிருந்த பக்தர்கள், "திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்தும் உருகார் என, மழை வேண்டி திருவாசகம் ஓதும் நிலையில், உத்தரவு பொருளாக தண்ணீர் வந்துள்ளதால், நிச்சயம் பெருமழை பொழியும்; தமிழகம் செழிக்கும் என, நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.