பதிவு செய்த நாள்
20
மே
2013
10:05
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில் புதிய கிரிவல பாதையை அமைக்கும் பணி, சஷ்டி கிரிவல குழு பக்தர்களால் நடந்து வருகிறது. சென்னிமலை முருகன் கோவிலில், பவுர்ணமி, சஷ்டி நாட்களில், 16 கிலோ மீட்டர் தார்சாலை மலையை சுற்றி கிரிவலம் வந்து, முருகனை வணங்கி செல்கின்றனர். தற்போதையை கிரிவலப்பாதையில், பல்வேறு ஊர்கள் இருப்பதால், கிரிவலம் சிறப்பாக அமையாததால், பக்தர்கள் விரக்தியில் இருந்தனர். கடந்த, 1999ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியின்போது, சென்னிமலை முருகன் கோவிலுக்கு புதிய கிரிவலப்பாதை பணியை, அப்போதைய எம்.எல்.ஏ., ராஜ்குமார் துவக்கி வைத்தார். அதன்பின், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், புதிய கிரிவலப்பாதை பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், கிரிவலப்பாதையை சுற்றி வருவதில் திருப்தி இல்லாததால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், தார் சாலையில் கிரிவலம் வருவதால், வயதானவர்களும், சிறுவர்களும், பெண்களும் அவதிப்பட்டனர். சஷ்டி தோறும் கிரிவலம் வரும் பக்தர்கள் குழு சார்பில், புதிய கிரிவல பாதையை அமைக்கும் பணிகளின் துவக்க விழா நடந்தது. சஷ்டி கிரிவல பக்தர்கள் குழு அறங்காவலர் ஸ்ரீ வெங்கடேஷ் ஸ்வாமிகள் தலைமை வகித்தார். தலைவர் பானுமதிரமேஷ் முன்னிலை வகித்தார். செயலாளர் தனபால் வரவேற்றார். புதிய கிரிவல பாதை அமைக்கும் பணியை, பெருந்துறை தாசில்தார் ஜான்சிராணி துவக்கி வைத்தார். சென்னிமலை யெங் இந்தியா பள்ளியின் தாளாளர் லட்சுமணன், ஸ்ரீ ஆதித்யா பள்ளி தாளாளர் கைலாசநாதர், எக்கட்டாம்பாளையம் கிராம பஞ்சாயத்து தலைவர் சம்பூர்ணம் வேலுசாமி, யூனியன் கவுன்சிலர்கள் ஜிஜேந்திரன், தங்கவேல், நாடார் மகாஜன சங்க ஒன்றிய செயலர் ஆறுமுகம், பி.ஜே.பி., நெசவாளர் அணி மாவட்ட தலைவர் கோதண்டபாணி உட்பட பலர் பங்கேற்றனர். சென்னிமலையில் புதிய கிரிவல பாதை அமைந்தால், கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை உயரும்.மலை பகுதியிலேயே, வலம் வருவதால், கிரிவலத்தின் சிறப்பு கூடும், என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். புதிய கிரிவல பாதை அமைக்க, அரசு நிதி ஒதுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.