முருகனது திருவுருவம் சிவந்தமேனியும், அபயவரத்துடன் கூடிய திருக்கரங்களும், மார்பில் சாய்ந்த வேலும், திருவடியில் மயிலும், தாமரை ஏந்திய கரத்துடன் வள்ளி தேவி வலத்திலும், நீலோத்பலம் ஏந்திய கரத்துடன் தெய்வயானை இடத்திலும் அமைய ஓவியத்தில் வரைவதே முறை. இறைவன் மூன்று கண்களை உடையவன். சூரியன், சந்திரன், அக்னி என்ற மூன்று சுடர்களே முக்கண்கள். முருகன் இமையா நாட்டம் உடையவன். கண்களை மூடுவதில்லை. தாமரை சூரியனைக் கண்டு மலர்வது; நீலோத்பலம் என்ற குமுதம் சந்திரனைக் கண்டு மலர்வது. முருகனது வலப்புறத்தில் விளங்கும் வள்ளி தேவியின் திருக்கரத்தில் உள்ள தாமரை, முருகனின் வலநேத்திரமாகிய சூரியஒளி பட்டு, அறுபது நாழிகையும் சுருங்காமல் மலர்ந்த வண்ணமாக விளங்கும். இடப்புறத்தில் தெய்வயானை அம்மையின் திருக்கரத்தில் உள்ள நீலோத்பலம் இட நேத்திரமாகிய சந்திர ஒளிபட்டு, அறுபது நாழிகையும் மலர்ந்தே இருக்கும். முருகனை உபாசனை செய்பவர்களின் வாழ்வு என்றைக்கும் மலர்ந்திருக்கும். இப்போது பெரும்பாலும் படம் வரைபவர்கள் இரண்டு தேவிமார்களின் கரங்களிலும் தாமரையையே போட்டு விடுகிறார்கள். இது தவறான முறையாகும்.