பதிவு செய்த நாள்
27
மே
2013
10:05
பேரூர்: மழைவேண்டி, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் வசந்தோற்சவ விழா நடந்தது. பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் வசந்தோற்சவ விழா நடந்தது. முதல் இரு நாட்கள் வெண்பட்டாடை, வெள்ளை மலர்களாலும், அடுத்த மூன்று நாட்கள் சிவப்பு பட்டாடை, சிவப்பு மலர்களாலும், அடுத்த இரு நாட்கள் மஞ்சள் பட்டாடை, மஞ்சள் மலர்களாலும் , எட்டாவது நாள், பச்சைபட்டாடையும், மரிக்கொழுந்து முதலிய பச்சை இலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு, சோமாஸ்கந்தர், பச்சைநாயகி அம்மனுக்கு தினமும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.தொடர்ந்து, வைகாசிவிசாகமும், பவுர்ணமியும் கூடிய நல்லநாளில் 9வது நாளாக கொண்டு பூச நட்சத்திரத்தில் வசந்தோற்சவ நிறைவு விழா, கடந்த 24ம்தேதி காலை ஸநபன பூஜையுடன் தொடங்கியது. பின்னர், மாலை 6.00 மணியளவில், பலவகையான மலர்கள், வாசனை திரவியங்களால் அலங்கரித்து, 4 வேதங்கள், சிவாகமம், திருமுறை உபசாரங்களோடு மகாதீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதமும் வினியோகிக்கப்பட்டது. பின்னர், அலங்கார கோலத்தில் சோமாஸ்கந்தர், பச்சைநாயகி அம்மன் தெப்பக்குளம் முன் நிறுத்தி, தீபாராதனை, கற்பூர வழிபாடு நடத்தப்பட்டு, தெப்பக்குளத்தில் விடப்பட்டது. கோவில் எதிரேயுள்ள அரச மரத்தடியில் 11 முறை வலம் வருதல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, நான்கு வேதங்கள், சிவாகமம், பாகவதங்களை சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் பாட சாமி திருவீதி உலா வந்து, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டது. பூஜைக்கான நிகழ்ச்சிகளை, கோவில் சர்வசாதகம் சிவசண்முக சுந்தர குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் நடத்தினர்; இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.