பதிவு செய்த நாள்
27
மே
2013
10:05
திருப்பதி: திருமலை ஏழுமலையானின் பிரசாதமான லட்டு தரத்தைமேலும்மேம்படுத்த, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.ஏழுமலையானின் முக்கிய பிரசாதமான லட்டு, உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. இதற்காக, நாள் ஒன்றுக்கு, இரண்டு முதல் மூன்று லட்சம் லட்டுகளை தேவஸ்தானம், திருப்பதியில் தயார் செய்கிறது. இதற்குதேவைப்படும், 3,300 டன்னிற்கு மேற்பட்ட நெய் கொள்முதல் செய்கிறது. இதற்காக, 100கோடி ரூபாய்வரை செலவிடுகிறது தேவஸ்தானம். இந்த நெய் நறுமணம் குன்றாமல், இயற்கையான முறையில் சேமிக்க, ஆறு பெரிய சேகரிப்பு தொட்டிகளையும் வாங்குவதற்கு, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.மொத்தமாக நெய்யை வாங்கி சேமிப்பதால், நாளடைவில் நெய்யின் தரம் சிறிது, சிறிதாக குறைந்து விடுகிறது. இதனால், பிரசாதங்களின் மணம், சுவை ஆகியவை குறைய வாய்ப்புள்ளது. அதை தவிர்க்க மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை ஆய்வு செய்ய, தேவஸ்தானம், ஒன்பதுபேர் அடங்கிய சிறப்பு நிபுணர்கள் குழுவை அமைத்துள்ளது.உடனடி தீர்வாக, பழைய நெய்யை கொள்முதல் செய்யாமல், புது நெய்யை கொள்முதல் செய்யலாம் என்ற முடிவுக்கு, தேவஸ்தானம் வந்துள்ளது. பற்றாக்குறை இல்லாமல் நெய்தொடர்ந்து கைவசம் இருக்கவும் இதில் ஏற்பாடு செய்யப்படும். இதற்கான நிரந்தர தீர்வை, சிறப்பு நிபுணர் குழுவின் ஆய்விற்குப் பின்,தேவஸ்தானம் முடிவு செய்யும் என, தெரிகிறது. அதன் மூலம் லட்டு நறுமணம் மேலும் சிறப்பாக இருக்கும் என, கூறப்படுகிறது.
ஒன்றிணைக்கப்பட்ட லக்கேஜ் மையம்: திருமலையில் பக்தர்களின் வசதிக்காக, ஒன்றிணைக்கப்பட்ட, "லக்கேஜ் மையத்தை ஏற்படுத்த, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலையில் முன்பு, பக்தர்கள் தங்கள் உடமைகள் அடங்கிய, பெட்டி, மொபைல் போன், செருப்புக்கள் போன்றவற்றை, எந்த மையத்தில் கொடுத்தனரோ, அங்கேயே, திரும்பப் பெற வேண்டும். இதனால், பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். எனவே, ஒன்றிணைக்கப்பட்ட லக்கேஜ் மையத்தை ஏற்படுத்த, தேவஸ்தானம் முடிவு செய்தது. இனி, திருமலைக்கு வரும் பக்தர்கள், தங்களது, "லக்கேஜ்களை, எந்த தேவஸ்தான மையத்தில் கொடுத்தாலும், அதை, "யாத்திரீகர் வசதி சமுதாயம் -4ல் (பழைய அன்னதானக் கூடம்) பெற்றுக் கொள்ளும் வசதி, ஜூன், 1ம் தேதி முதல், அமலுக்கு வருகிறது. இத்தகவலை திருமலை - திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி, சீனிவாச ராஜு தெரிவித்தார்.