பதிவு செய்த நாள்
05
ஜூன்
2013
10:06
வலங்கைமான் அருகே, ஆலங்குடி குருபகவான் கோவிலுக்கு வரும் பக்தர்களை, உள்ளூர் ஆளுங்கட்சியினர், வியாபார நோக்கில் மிரட்டுவதால், அச்சத்தில் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே, ஆலங்குடியில் வரலாற்று சிறப்பு மிக்க குருபகவான் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவில் வளாகத்தில் நெய்தீபம், அர்ச்சனை பொருட்கள் மற்றும் பிரசாத விற்பனைக்கு, முறைப்படி டெண்டர் விடப்பட்டு, கடைகள் இயங்குகின்றன. இதில், கோவில் உள்ளேயும் சில கடைகள் உள்ளன. நெய் தீபம், 24,எண்ணிக்கை கொண்ட தட்டு, 50 ரூபாய்க்கும், தனி விளக்கு, நான்கு ரூபாய்க்கும் விற்பனை செய்வதுடன், அர்ச்சனை தட்டு ஆளுக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கின்றனர்.
விலை மற்றும் விபரம் கேட்கும் பக்தர்களை கோவிலுக்குள், கடை நடத்தும் உள்ளூர் அ.தி.மு.க.,வினர், அடாவடியில் ஈடுபட்டு பக்தர்களை மிரட்டுகின்றனர். பக்தர்கள் அச்சத்துடன், கோவில் நிர்வாகத்திடம் முறையிட்டால், "நாங்கள் அவர்களை பகைத்துக் கொண்டு, இங்கு வேலை செய்ய முடியாது என, பயப்படுகின்றனர்.மேலும், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பையில் அர்ச்சனை பொருட்களை வழங்குகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள், ஊழியர்கள், மற்றும் அர்ச்சகர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் வகையில், கோவில் வளாத்தில் இயக்கும் கடைகளை வெளியில் நடத்தவும், அர்ச்சனை பொருட்களை, துணிப் பையில் வழங்கவும், ஆளும் கட்சியினர் குறுக்கீடுகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோவிலுக்கு வரும் பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர். - நமது சிறப்பு நிருபர் -