பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த கரப்பாடி கிராமத்திலுள்ள காளியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், சுவாமி மலர் அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பொள்ளாச்சியிலிருந்து தாராபுரம் செல்லும் ரோட்டிலுள்ளது கரப்பாடி கிராமம். இங்குள்ள காளியம்மன் கோவில் ஆவலப்பம்பட்டி ஜமீனின் பாரமரிப்பிலுள்ளது. இக்கோவிலில் காளியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வைகாசி மாதம் அம்மனுக்கு தேர்த்திருவிழா, கிராமமக்கள் சார்பில் நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த வாரம் துவங்கியது. சக்திகரகம் அழைத்தல், பூச்சட்டி, மாவிளக்கு, முளைப்பாரி போன்ற விசேஷங்கள் நிறைவடைந்தது. இதையடுத்து தேர்த்திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடந்தன. தேர்நிலையில் தேர் முழுமையாக மலர்களாலும், வண்ணகாகிதங்களாலும், கோபுர கலசங்களாலும் அலங்கரிக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட சுவாமி தேரில் எழுந்தருளச்செய்தனர். மாலை தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக சட்டசபை துணைசபாநாயகர் ஜெயராமன் தேர்வடம் பிடித்து இழுத்தார். தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்தனர். தேர் ஊரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் தேர்நிலையை அடைந்தது. கரப்பாடியை சுற்றியுள்ள 12 கிராமமக்கள் தேர்த்திருவிழாவை காண வந்திருந்தனர்.