பதிவு செய்த நாள்
01
மார்
2011
05:03
சிவராத்திரியன்று சிவாலயத்திற்கு வில்வ இலையுடன் செல்ல வேண்டும். இரவு கடைசி ஜாம பூஜை வரை அங்கே இருக்க வேண்டும். சிவாய நம என உச்சரிக்க வேண்டும். அன்று சாப்பிடக்கூடாது. நோயாளிகள் எளிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். முதல் ஜாம பூஜைக்கு பால், அடுத்த பூஜைக்கு தயிர், மூன்றாம் ஜாமத்திற்கு வெண்ணெய், நான்காவது ஜாமத்திற்கு தேன் ஆகியவற்றை அபிஷேகம் செய்வதற்காக கோயிலில் ஒப்படைக்க வேண்டும். மறுநாள் காலையில் அன்னதானம் செய்ய வேண்டும். அன்னதானத்துக்கே பிறகே சாப்பிட்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
சிவம் என்பதன் பொருள்
சிவம் என்ற சொல்லுக்கு சுகம் என்று பொருள். சிவராத்திரி விரதம் அனுஷ்டித்தால் குடும்பத்தில் நன்மை பெருகும் என்பது நம்பிக்கை. இந்த விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்க வேண்டும். சிவராத்திரி விரதம் இருப்பதற்கு பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. ஒருகாலத்தில் உலகம் அழிந்தபோது மீண்டும் உலகை சிருஷ்டிக்க உமாதேவி சிவனைபூஜித்து ஒரு இரவு முழுவதும் இருந்த விரதமே சிவராத்திரி விரதம். மற்றொரு கதையின்படி, சிவனின் கண்களை பார்வதிதேவி மூடியதாகவும், இதனால் உலகம் இருண்ட நேரத்தை சிவராத்திரியாக அனுஷ்டிப்பதாகவும் கூறுகிறார்கள்.
ஜோதிர்லிங்கம் என்றால் என்ன?
ராமேஸ்வரத்துக்கு போய் ஜோதிர்லிங்கத்தைப் பார்த்திருப்பீர்கள். அதன் தத்துவம் என்ன? யோகிகள், தங்கள் சிரசிலுள்ள சகஸ்ரார கமலத்தில் (ஆயிரம் இதழ் தாமரை போன்றது) உள்ள சந்திரமண்டலத்தில், சிவனை ஜோதி வடிவாக தியானம் செய்வார்கள். அப்போது, சந்திரமண்டலத்தில் இருந்து அமிர்தம் கொட்டும். அவர்கள் பரமானந்த நிலையில் திளைப்பார்கள். இதன் காரணமாக, உலக வடிவான ஜோதிர்லிங்கம் குளிரும். அது குளிர்ந்தால் உலகமே குளிரும்.அதாவது, மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள். நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு இது போன்ற யோகம் சாத்தியமல்ல. நாம் செய்யும் யோகா எல்லாம் உடல்நலத்துக்காக மட்டுமே. லிங்கம் குளிர்ச்சியாக இருக்க வேண்டுமே என்பதற்காகத்தான் வடக்கேயுள்ள ஜோதிர்லிங்கத் தலங்களில் பக்தர்களே அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
லிங்கோத்பவரின் அடியும் முடியும் புதைந்த ரகசியம்
சிவாலயங்களில் கோஷ்டத்தின் பின்புற சுவரில் லிங்கோத்பவரைக் காணலாம். இவரது பாதங்கள் பூமியில் புதைந்திருக்கும். தலை வானில் புதைந்திருக்கும். மேலே ஒரு அன்னமும், கீழே ஒரு பன்றியும் செதுக்கியிருப்பார்கள். அன்னம் பிரம்மாவாகவும், வராகம் (பன்றி) விஷ்ணுவாகவும் கருதப்படுகிறது. இவர்கள் சிவனின் அடிமுடியைக் காண போட்டியிட்டதாக ஒரு புராணக்கதை உண்டு. உண்மையில் இதன் தத்துவம் என்ன தெரியுமா? சிவன் லிங்க வடிவமாக உள்ளார். லிங்கம் என்பது நீள் வட்ட வடிவமுடையது. சதுரம், செவ்வகம், முக்கோணம் எதுவாக இருந்தாலும் அதற்கு ஆரம்ப இடமும், முடியும் இடமும் உண்டு. ஆனால், வட்டத்துக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. சிவனும் ஆதிஅந்தம் இல்லாதவர் என்பதை இந்த வடிவம் காட்டுகிறது. ஆனால், இந்த வடிவம் மனதில் நிற்காது என்பதற்காக ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. ஊரில் இருக்கும் மகனிடமோ மகளிடமோ போனில் பேசினால் திருப்தி இருக்காது. நேரில் பார்த்தால் தான் மனம் திருப்தியடையும். அதுபோல, சிவனை நேரில் பார்த்த திருப்தி பெற, அவரது உருவத்தை நீள்வட்ட லிங்கத்துக்குள் நிறுத்தி, தலையும், திருவடியும் புதைந்திருப்பது போல் காட்டி, அவர் ஆதிஅந்தமில்லாதவர் என்ற தத்துவம் மாறாமல் உருவம் கொடுத்தனர்.
மகாபாரதத்தில் சிவராத்திரி
மகாபாரதத்தில் சிவராத்திரி விரதம் பற்றி கூறப்படுகிறது. பீஷ்மர் அம்புபடுக்கையில் படுத்தபடி தர்மத்தைப்பற்றி எடுத்துக்கூறும்போது சித்ரபானு என்ற மன்னன் அவரிடம் மகா சிவராத்திரி விரதம் பற்றி கூறுகிறான். இந்த மன்னனுக்கு பூர்வ ஜென்ம வரலாறுகளை நினைவுகூறும் சக்தி உண்டு. அதன் அடிப்படையில் கடந்த பிறவி ஒன்றில் அவன் இவ்விரதத்தை அனுஷ்டித்ததாக சொல்கிறான். அந்தபிறவியில் அவன் சுச்வரன் என்ற பெயரில் வேடனாக இருந்தான். இந்த பெயருக்கு இனியகுரல் என்று பொருள். ஒருமுறை வேட்டைக்கு சென்றபோது ஒரு மரத்தில் ஏறி அமர்ந்திருந்தான். அது ஒரு வில்வ மரம். இரவு முழுக்க காத்திருந்தும் எந்த மிருகமும் அகப்படவில்லை. குடும்பத்தாரின் நினைவு அவனுக்கு வந்தது. பசியும் தாகமும்அவனைவாட்டி எடுத்தது. குடும்பத்தினரை நினைத்து கண்ணீர்விட்டான். பொழுதுபோகவில்லையே என்பதற்காக மரத்தில் இருந்த வில்வ இலைகளை பறித்து தரையில் போட்டுக் கொண்டிருந்தான். மறுநாள் ஒரு மான் சிக்கியது. அப்போது ஒருவன் வேடன் எதிரே வந்தான். அவன் அந்த மானை தனக்கு தரும்படி கேட்டான். பசியால் அவன் முகம் வாடி உள்ளது என்பதை அறிந்த வேடன், அவனுக்கும் தன்னிடம் இருந்த மான் இறைச்சியின் ஒரு பகுதியை கொடுத்தான். பிறகு வீட்டிற்கு சென்று சாப்பிட்டான். அந்த வேடனின் இறுதிக்காலம் வந்தது. அவன் இறந்ததும் சிவலோகத்திற்கு சென்றான். வேடன் ஆனாலும் காட்டில் மரத்தின் மீது அமர்ந்திருந்த நாள் சிவராத்திரி என்பதால், சிவபதம் கிடைத்துவிட்டது. அன்று இரவில் வில்வ இலைகளை கீழே போடும்போது மரத்தின் அடியில் இருந்த லிங்கத்தை கவனிக்கவில்லை. இடுப்பில் கட்டியிருந்த குடுவையிலிருந்து மிச்சம் மீதி இருந்த தண்ணீர் லிங்கத்தின் மீது பட்டது. அபிஷேமாகவும், அர்ச்சனையா கவும் ஏற்றுக்கொண்டார். விரதத்தின் முடிவில் தானமும் செய்துவிட்டான். இதன் காரணமாக அவனுக்கு சொர்க்கம் கிடைத்தது.
சிவராத்திரி பூஜை வீட்டில் செய்வது எப்படி?
உங்கள் வீட்டில் சிவலிங்கம் அல்லது நடராஜர் சிலை இருந்தால் வீட்டிலேயே நான்கு ஜாமமும் பூஜை செய்யலாம். அன்று பகலில் சாப்பிடாமல், மாலையில் பழம், பால் மட்டும் அருந்தி பூஜையைத் துவக்க வேண்டும். மாலை 6.30. இரவு 9.30, நள்ளிரவு 12.30, அதிகாலை 3மணி ஆகிய நேரங்களில் வில்வ இலை மற்றும் மலர் தூவி தீபாராதனை காட்ட வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் குடும்பத்துடன் அமர்ந்து சிவாயநம நமசிவாய என மந்திரம் சொல்லலாம். சிவன் தொடர்பான பாடல்கள், கதைகளை பக்தியுடன் ஒருவர் சொல்ல, மற்றவர்கள் கேட்கலாம். விழிக்கிறோம் என்ற பெயரால் சினிமா, டிவி பார்க்கக்கூடாது.
சிவராத்திரி கொண்டாட்டம் ஏன்?
பார்வதிதேவி ஒருநாள் விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூடினாள். ஈரேழு உலகங்களும் இருளில் மூழ்கி உயிர்கள் வருந்தின. அந்நாளே மகாசிவராத்திரி என்று கூறுவர். திரயோதசியன்று மாலையில் சிவபெருமான் பிரதோஷ நடனம் ஆடினார். அன்றிரவு தேவர்கள் பாற்கடலை கடைந்து பெற்ற விஷத்தை சிவபெருமானுக்கு அர்ப்பணித்தனர். சிவபெருமான் நஞ்சையும் விரும்பி உண்டு தேவர்களைக் காத்தார். விஷத்தைக் குடித்ததால் மயக்கமடைந்தார். அன்றிரவு சிவபெருமானைத் துதித்து தேவர்கள் யாவரும் வணங்கி நின்றனர். அந்நாளே சிவராத்திரி. மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க எமன் விரைந்து வந்தான். உயிரைக் காத்துக் கொள்ள அவன் சிவலிங்கத்தை ஆரத்தழுவிக் கொண்டான். ஆனாலும், தர்மவானான எமதர்மன் பாசக்கயிற்றை வீசினான். கயிறு லிங்கத்தையும் பற்றிக் கொண்டது. சிவபெருமான் எமனை காலால் உதைத்தார். அதன்பின், தேவர்கள் சிவனை வேண்டி எமனை உயிர்ப்பித்தனர். அந்நாளே மகாசிவராத்திரி என்று கூறுவர். அதனால், மகாசிவராத்திரி நாளில் சிவனை வழிபட்டோருக்கு மரணபயம் நீங்கும் என்பது ஐதீகம்.
நான்கு காலம்! நான்கு கோலம்!
மகாசிவராத்திரியன்று இரவுப்பொழுதில் நான்குகாலஅபிஷேகம் சிவபெருமானுக்கு நடைபெறும். ஒவ்வொரு காலத்திலும் சிவபெருமானின் ஒவ்வொரு கோலத்தை வழிபடவேண்டும். முதல்காலத்தில் முருகப்பெருமானை நடுவில் அமர்த்தி உமாதேவியும், சிவபெருமானும் காட்சிதரும் சோமாஸ்கந்தரை வழிபடுவர். இரண்டாம்காலத்தில் தென்முகக்கடவுளான தட்சிணாமூர்த்தியை வணங்கவேண்டும். 3ம் காலத்தில் கருவறையின் பின்புறமுள்ள லிங்கோத்பவரை தரிசிக்கவேண்டும். நான்காம் காலத்தில் ரிஷபவாகன சிவனான சந்திரசேகரரை வழிபடவேண்டும்.
சிவராத்திரிக்கு வெந்நீர் அபிஷேகம்
உக்கிரசேன மன்னன் சிவபெருமானை வேண்டி பார்வதிதேவியை மகளாகப்பெற்றான். மன்னன் மகளுக்கு தேவிகாஎன்று பெயரிட்டு வளர்த்தான். அவள் சிவபக்தியோடு இறைவனைப் பூஜித்து வழிபட்டாள். அப்பெருமானுக்கு பொன்மலைநாதர் என்று பெயர். இவர் ஆரணிக்கும் பேரூருக்கும் இடையில் அமைந்துள்ள தேவிகாபுரத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு மகாசிவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 64 சக்திபீடங்களில் இத்தலம் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இங்கு அபிஷேகத்தின்போது வெந்நீரையே பயன்படுத்துவதும் மாறுபட்டதாகும்.
பஞ்ச சிவராத்திரி
சிவராத்திரி ஐந்து வகைப்படும். அவை நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாதசிவராத்திரி, யோகசிவராத்திரி, மகா சிவராத்திரி. மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தசி நாளை மகாசிவராத்திரியாக சிவாலயங்களில் கொண்டாடுகிறோம். ராத்ர என்னும் சொல்லுக்கு செயலற்று ஒடுங்கி நிற்கும் காலம் என்று பொருள். இதனையே சம்கார காலம் அல்லது பிரளயகாலம் என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு நாள் இரவும் உயிர்கள் தூக்கத்தில் ஒடுங்கி செயலற்று விடுகின்றன. அதனையே நித்திய சிவராத்திரி என்று குறிப்பிடுவர். தைமாத தேய்பிறை சதுர்த்தசியில் வருவது பட்ச சிவராத்திரி. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி நாளில் வருவது மாத சிவராத்திரி. சோமவாரமான திங்கட்கிழமை சிவராத்திரி வந்தால் யோக சிவராத்திரி என்பர். மாசிமாத சிவராத்திரி மகாசிவராத்திரி.
எல்லாம் இங்கு ஐந்து நாள்
சிவபெருமானுக்கு ஐந்தெழுத்து மந்திரத்தால் ஏற்பட்ட பெயர் பஞ்சாட்சரம். பஞ்சாட்சர மந்திரமான நமசிவாயத்தை இறைவனே ஓதுவதால் காசியை விட புனிதமான தலமாக விருத்தாசலம் போற்றப்படுகிறது. விருத்தாசலம் என்பதற்கு பழமையான மலை என்பது பொருள். பூலோகத்தில் இம்மலையே மிகப்பழமையானது என்று இக்கோயில் புராணம் கூறுகிறது. இக்கோயிலுக்கும் ஐந்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. திசைக்கொரு கோபுரமாக நான்கு ராஜகோபுரங்களும், கோயிலுக்குள்ளே ஒரு கோபுரமாக ஐந்து கோபுரங்கள் உள்ளன. கோயிலில் ஐந்து கொடிமரங்கள் உள்ளன. பிரம்மோற்ஸவத்தின் போது ஐந்து கொடிமரத்திலும் கொடி ஏற்றப்படுகிறது. வலப்புறம் தலைசாய்த்தபடியே ஐந்து நந்திகள் இருப்பது சிறப்பாகும். மணிமுத்தாறு, அக்னி, சக்கர, குபேர, நித்தியானந்த கூபம் என்னும் ஐந்து தீர்த்தம் இங்குண்டு. விபசித்து, உரோமசர், குமாரதேவர், நாதசர்மா, அவைர்த்தணி என்னும் ஐந்து ரிஷிகள் விருத்தகிரீஸ்வரரை வழிபட்டு முக்தி பெற்றனர்.
ஜாக்கிரதையா இருங்க!
பூஜையறையில், கண்ணாடிபோல் இருக்கும் ஸ்படிக லிங்கம் வைத்து வழிபடுவோர் ஏராளமாக இருக்கிறார்கள். இதை வழிபடும்போது,மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஸ்படிகலிங்க வழிபாட்டின் போது, உங்கள் மனதில் என்ன தோன்ற வேண்டும் தெரியுமா? ஸ்படிகலிங்கத்திற்கு நிறம் கிடையாது. ஆனால், அதன் பின்னால் ஒரு செவ்வரளியை வைத்தால் சிவப்பாகத் தோன்றும். வில்வத்தை வைத்தால் பச்சையாக இருக்கும். அதாவது, எதை வைத்துள்ளோமோ, அந்த நிறத்தை அப்படியே உள்வாங்கி நம்மிடம் காட்டும். அதே போல், நாம் என்ன எண்ணத்துடன் அந்த லிங்கத்தை வணங்குகிறோமோ, அதற்குரிய பலனே நமக்கு கிடைக்கும். நம் எதிரிக்கு கூட கஷ்டம் வர வேண்டும் என அந்த லிங்கத்திடம் கேட்கக்கூடாது. அவ்வாறு கேட்டால், அது நம்மையே வந்தடையும். எனவே, ஸ்படிக லிங்க வழிபாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நமக்கு ஒரு கஷ்டம் என்றால், நீ பார்த்துக்கொள் என்று அந்த கஷ்டத்தையும் அவனிடமே சமர்ப்பித்து விடுங்கள். நடவடிக்கை எடுக்க வேண்டியது அவன் பொறுப்பு. ஸ்படிகலிங்கத்தின் முன்னால் நின்று வீட்டுக்கும், நாட்டுக்கும் நன்மையை மட்டும் கேளுங்கள்.
நமசிவாய என்று சொல்வோமே! நன்மைகள் ஆயிரம் கொள்வோமே
கயிலாயத்தில் பார்வதி சிவபெருமானிடம் உயிர்கள் உய்யும் வழி பற்றி விவாதித்துக் கொண்டிருந்தாள். அப்போது தேவி இறைவனிடம், நாதா! உங்களை வழிபாடு செய்வதில் எந்தநாள் மிகவும் உகந்தது? என்று கேட்டாள். சுவாமியும் அன்னையின் விருப்பமறிந்து, உமா! மாசி மாதத்தேய்பிறையில் வரும் சிவராத்திரியே எனக்கு மிகவும் உகந்தநாளாகும். அந்நாளில் செய்யும் தீர்த்த ஸ்நானம், தூபதீபம், நிவேதனம், அபிஷேகம் ஆகிய வற்றைக் காட்டிலும் விரதம் மேற்கொள்வதே சிறப்பாகும். சிவபெருமானின் உள்ளம் அறிந்த உமையவள் மிகவும் பரவசமுற்றாள். தானும் சிவராத்திரி நோன்பிருக்க எண்ணம் கொண்டாள். தன்னுடைய தோழிகளுக்கும் விஷயத்தை தெரிவித்தாள். அவர்கள் பூலோகத்திற்கு தெரியப்படுத்தினர். இப்படியே சிவராத்திரி விரதமகிமை உலகெங்கும் பரவியது.மனிதனுக்கு சத்வ, ரஜோ, தமோ என்னும் மூவித குணங்கள் இருக்கின்றன. இதில் சாதுக்களிடம் இருக்கும் உயர்ந்த குணமே சத்வகுணம். ரஜோ, தமோ குணங்கள் நம்மை தாழ்ந்த நிலைக்கு கொண்டு செல்பவை. காமம், கோபம், பொறாமை கொண்டு செயலைச் செய்பவன் ரஜோ குணம் பொருந்தியவன். சோம்பல், தாமதம் ஆகிய குணங்களைக் கொண்டவன் தாமச குணம் பொருந்தியவன். சிவராத்திரி விரதத்தின் மூலம் இவ்விருகுணங்களையும் போக்கிக் கொள்கிறோம். சோம்பல் தரும் தூக்கத்தை வெல்லவேண்டும் என்பதால், இந்நாளில் இரவு முழுவதும் விழிக்கவேண்டும் என்பதை விரத நியமமாக ஏற்படுத்தினர்.சிவனை அபிஷேகம் செய்வது புற வழிபாடு. உண்மையில் சிவபெருமான் ஒளிவடிவமானவர். தவக்கனலால் அவர் ஜொலிக்கிறார். அவரிடம் நாம், இறைவா! பால் தண்ணீர், பால் போன்றவற்றால் நாங்கள் அபிஷேகம் செய்கிறோம். நீர் எம்மை ஞானத்தால் நீராட்டுவீராக. பாவம் அனைத்தையும் போக்கி புனிதமாக்குவீராக. உமது அருளால் அநீதியும், அக்கிரமமும் ஒட்டுமொத்தமாக அகற்றப்படட்டும். இரண்டற்ற நிலையில் பரம்பொருளான உமது அருள் எம்மிடம் பூரணமாக நிலைத்திருக்கட்டும் என்று வழிபட வேண்டும்.
ஆன்மிக சாதகர்கள் அனைவருமே இருக்கவேண்டிய விரதம் சிவராத்திரி. தண்ணீரைக் கூட அருந்துவதைத் தவிர்ப்பது சிறப்பு. உலக அமைதி மற்றும் சுபிட்சத்திற்காக சிவனுக்குரிய ஹோமம் செய்ய வேண்டும் அல்லது அதில் கலந்துகொள்ள வேண்டும். நாள் முழுவதும் ஓம் நமசிவாய மந்திர ஜபத்தை தியானிக்க வேண்டும். இரவில் சிவாலயத்தில் ஒன்றுகூடி நான்கு கால அபிஷேக தரிசனமும், மந்திரஜெபமும் செய்யவேண்டும். என் இதயத் தாமரையில் வீற்றிருக்கும் ரத்தினமான சிவனே! உம்மை நான் வணங்குகிறேன். சிரத்தை, பக்தி என்னும் நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரான என் தூய மனதால் அபிஷேகம் செய்கிறேன். தியானம் என்னும் நறுமணப்பூக்களால் வழிபடுகிறேன்,என்று சொல்லி உளமாற வழிபட வேண்டும். சிவபெருமானே! நீரே என் உயிர். என் மனமே பார்வதி. என் கருவி கரணங்களே உமது சேவகர்கள். என் உடலே உமது வீடு. என் அன்றாட செயல்கள் அனைத்தும் உமது வழிபாடு. என் உறக்கத்தில் உம்மோடு இரண்டற கலந்து விடுகிறேன். என் கால் நடக்கும் பாதை எல்லாம் உமது கோயில் பிரகாரம். என் பேச்செல்லாம் உமது பிரார்த்தனை மொழி. இவ்விதம் என் எண்ணம், சொல், செயல் அனைத்தையும் உமக்கே அர்ப்பணிக்கிறேன், என்றும் பிரார்த்திக்கலாம். சிவராத்திரி நாளன்று மனவீட்டில் விளக்காக திகழும் ஐந்தெழுத்து மந்திரம் நமசிவாயத்தை இயன்றவரை சொல்லி ஆயிரமாயிரம் நன்மைகளை வாழ்வில் பெறுவோம்.