பதிவு செய்த நாள்
08
ஜூன்
2013
10:06
திருச்செங்கோடு: அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில், தங்கத்தேர், ஈசானி மூலையில் நிறுத்தப்பட்டுள்ளதால், பல்வேறு இடையூறுகள், இயற்கை பாதிக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக, புதிய சர்ச்சை வெடித்துள்ளது. திருச்செங்கோட்டில், பிரசித்தி பெற்ற அர்த்தாரீஸ்வரர் மலை கோவில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலில், ஸ்வாமி ஆண் பாதி, பெண் பாதியாக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலுக்கு, தங்கத்தேர் அமைக்க வேண்டும் என்பது, அப்பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கை. அதற்கு, அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்களிடம் இருந்து, 1.70 கோடி ரூபாய் நன்கொடை வசூல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, 11 கிலோ தங்கம், 35 கிலோ வெள்ளி, 394 கிலோ செம்பு, 90 கன அடி தேக்கு, 15 கன அடி வாகை மரம் மற்றும் உப மூல கச்சா பொருட்களை கொண்டு, 2009ம் ஆண்டு தங்கத்தேர் உருவாக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளாக, பக்தர்கள், நன்கொடையாளர்கள், வேண்டுதல் செய்தவர்கள் என பலரும் தங்கத்தேர் இழுத்து, ஸ்வாமியை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், தங்கத்தேர் நிலை நிறுத்தப்பட்டுள்ள இடம் குறித்து, புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அதனால், பல்வேறு இடையூறுகள், இயற்கை பாதிப்புகள் ஏற்படும் என்ற பீதி கிளம்பியுள்ளது.
கோவில் குருக்கள் சிலர் கூறியதாவது: தங்கத்தேர் ஈசானி மூலையில், நிலை கொண்டுள்ளது. இப்பகுதியில், யாக சாலைகள், யாக குண்டங்கள் தான் அமைக்க வேண்டும். விலை மதிப்புள்ள தங்கத்தேரை நைருதி மூலை எனப்படும் குபேர மூலையில் அமைப்பது தான் சிறப்பு. ஆகம, வாஸ்து சாஸ்திரங்களுக்கு மாறாக, தங்கத்தேர் நிலைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அதனால், ஊருக்கு பல இடையூறுகள், இயற்கை பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. வாஸ்து நிபுணர்கள், ஆகம அறிஞர்களை கொண்டு ஆய்வு செய்து சரியான இடத்தில், தங்கத்தேர் நிலை அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.