பதிவு செய்த நாள்
17
ஜூன்
2013
10:06
திருக்கழுக்குன்றம்: நெரும்பூர், திருவாலீஸ்வரர் கோவிலை பராமரித்து, அங்கு, பூஜைகளை தொடர வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் கிராமத்தில், 900 ஆண்டுகளுக்கு முன், முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில், திருவாலீஸ்வரர் கோவில் கட்டப் பட்டது. இக்கோவிலுக்கு சொந்தமான பத்து ஏக்கர் நிலத்தை, இந்து சமய அறநிலைய துறையின் கண்காணிப்பில், பரம்பரை தர்மகர்த்தா நிர்வாகித்து வருகிறார்.
அமைப்பு: கோவிலின் கருவறையில், திருவாலீஸ்வரர், கிழக்கு நோக்கியும், திருபுரசுந்தரி அம்மன் கோவில், தெற்கு நோக்கியும் காட்சியளிக்கின்றனர். எதிரே நந்தி மண்டபம் உள்ளது. சுற்று பிரகார சுவரில் மேற்கே விஷ்ணு பகவானும், வடக்கே பிரம்மா, தூர்க்கை சுவாமிகளின் சன்னிதிகள் உள்ளன.கருவறை அருகே, அர்த்த மண்டபம் உள்ளே நான்கு துண்களில், மூன்று தூண்கள் ஒரே மாதிரியும், ஒரு தூண் மட்டும் மாற்று வடிவத்திலும் உள்ளது. போரில் வெற்றி பெற்றதற்கான அடையாளமாக இந்த தூண் அமைக்கப்பட்டுள்ளது என, கூறப்படுகிறது.
தல வரலாறு: நாகராஜா சுவாமிக்கு, தோஷம் ஏற்பட்டபோது, ‹ரிய உதய நேரத்தில், சிவனை சுற்றி வந்ததால், தோஷம் நீங்கியதாக ஐதீகம். இங்கு, பங்குனி உத்திர திருகல்யாணத்தன்று, இறைவனை வழிபாட்டு, மஞ்சள் தாலி எடுத்துக் கொடுத்தால், திருமணம் ஆகாதவர்களுக்கு, திருமணம் ஆகும் என்ற நம்பிக்கை உள்ளது. மன்னர்கள் காலத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய இக்கோவிலில், பிரதோஷம், சித்திரை பவுர்ணமி, பங்குனி உத்திரம், மார்கழி சிறப்பு பூஜைகள், தொடர்ந்து நடந்து வந்தன. இந்நிலையில், கடந்த 60 ஆண்டு களாக பராமரிப்பு இன்றி போய்விட்டதால், கோவில் சுவர்களில் மரங்கள் முளைத்து, விரிசல் ஏற்பட்டு சிதிலமடைந்துள்ளன. ராஜகோபுரத்தில் உள்ள சுதை சிற்பங்கள் உடைந்து, அடி பீடம் சிதிலமடைந்துள்ளது.
கோரிக்கை: இதே நிலை நீடித்தால், கோவில் முற்றிலும் சிதைந்துவிடும் அபாயம் நிலவுகிறது. எனவே, கோவிலை சீரமைத்து, திருப்பணிகள் செய்து, குடமுழுக்கு நடத்த, இந்து அறநிலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து, இந்து அறநிலைய துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""கோவிலை புணரமைக்க, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில், நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.