பதிவு செய்த நாள்
19
ஜூன்
2013
10:06
வடகுப்பம்: திரவுபதியம்மன் உடனுறை தர்மராஜ சுவாமி கோவில் பிரம்மோற்சவ திருவிழாவில், முக்கிய நிகழ்ச்சியாக அம்மன் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது. பள்ளிப்பட்டு அடுத்த, வடகுப்பம் கிராமத்தில், திரவுபதியம்மன் உடனுறை தர்மராஜா கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த ஆறு ஆண்டுகளாக பிரம்மோற்சவ விழா நடைபெறாமல் இருந்தது. உள்ளாட்சி தேர்தல் காரணமாக, தடைபட்டிருந்த இக்கோவில் திருவிழா, இந்த ஆண்டு நடத்த வடகுப்பம், சாமிநாயுடு கண்டிகை, முனுசாமி நாயுடு கண்டிகை மற்றும் கொல்லப்பள்ளி கிராம மக்கள் ஏற்பாடு செய்தனர். இதற்கு, ஒரு சிலர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து, இதுதொடர்பாக, சண்டை, சச்சரவு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பள்ளிப்பட்டு வருவாய் துறையினர், நான்கு கிராம மக்களையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, இந்த ஆண்டு திருவிழா நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து, கடந்த, 13ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இம்மாதம், 23ம் தேதி வரை நடைபெறும் இந்த பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, கடந்த ஞாயிற்றுக் கிழமை பகாசுரன் வதம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில், திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று, மங்கள வாத்தியங்கள் முழங்க, நான்கு கிராமத்தில் உள்ள தெருக்கள் வழியாக, அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இன்று காலை, 10:00 மணிக்கு தபசு மரம் ஏறுதல் நடக்கிறது. இறுதி நாளான, 23ம் தேதி காலை, 11:00 மணியளவில், துரியோதனன் வதம் செய்யும் படுகளம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு, 7:00 மணி அளவில், தீமிதி திருவிழாவும், அதைத் தொடர்ந்து அம்மன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. விழாவை ஒட்டி தினமும் மதியம், 2:00 மணியளவில் மகாபாரத ஹரிகதா கலாட்சேபம் நடைபெறும். இரவு, 10:00 மணியளவில் மகாபாரத தெருக்கூத்து நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் தர்மகர்த்தா வெங்கடேசலு நாயுடு, ஊராட்சித் தலைவர் வெங்கடரத்தினம் நாயுடு மற்றும் நான்கு கிராமங்களைச் சேர்ந்த விழாக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில், கலவரம் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.