ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்வத்தையொட்டி, நேற்று தேரோட்டம் நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள வடபத்ரசாயி கோயிலில் பெரியாழ்வார் சன்னதி உள்ளது. பெரியாழ்வார் பிறந்த நட்சத்திரமான ஆனி சுவாதி நட்சத்திரத்தையொட்டி, தேரோட்ட திருவிழா, கடந்த 8 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் பெரியாழ்வார் சந்திரபிரபை, பரங்கி நாற்காலி, யானை வாகனங்களில் வீதியுலா நடந்தது. விழாவின் 5ம் நாளன்று, கருடசேவை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 8மணிக்கு பெரியாழ்வார் தேரில் எழுந்தருள சிறப்பு பூஜைகளுக்கு பின், தேரானது நான்கு ரத வீதிகளும் சுற்றி வந்த நிலைக்கு வந்தது. தக்கார் ரவிச்சந்திரன்,இணை ஆணையர் தனபால், செயல் அலுவலர் சுப்பிரமணியன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.