பதிவு செய்த நாள்
20
ஜூன்
2013
10:06
ஆண்டவன் மீது பக்தி வைத்தவர்கள் உண்டு. ஆனால், பாசம் வைத்திருந்தோர் சிலரே. அவர்களில் ஒருவர் தான் பெரியாழ் வார். அவர் ஆனிமாதம் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபத்ரசாயி கோவில் இருக்கிறது. ஆண்டாள் இங்கு தான் வாசம் செய்கிறாள். இந்த ரில் முகுந்த பட்டர், பத்மவல்லி தம்பதியினர் மகனாகப் பிறந்தவர் விஷ்ணு சித்தர். படிப்பில் நாட்டமில்லாத விஷ்ணு சித்தருக்கு, பெருமாளுக்கு சேவை செய்வதே விருப்பமாக இருந்தது. இறைவனுக்கு தொண்டு செய்து வாழ்நாளைக் கழித்து விட வேண்டுமென நினைத்தார். கிருஷ்ண அவதாரத்தில், மலர் மாலைகள் சூட்டுவதில் பெருமாள் ஆர்வம் காட்டியது பற்றி அறிந்தார். அதனால், தங்கள் ஊரிலுள்ள வடபத்ரசாயிக்கு தினமும் புத்தம்புது மலர்களைப் பறித்து, மாலை தொடுத்து, அணிவிக்கும் கைங்கர்யத்தை செய்ய முடிவெடுத்தார். சுயலாபத்துக்காக சொத்தை விற்பவர் உண்டு. ஆனால், விஷ்ணுசித்தர் தன் சொத்தை விற்று, நிலம் வாங்கினார். அதை நந்தவனமாக்கி, அழகிய மலர்ச்செடிகளை நட்டார். நிலத்தைப் பண்படுத்தி, தினமும் தண்ணீர் பாய்ச்சி, குழந்தையை வளர்ப்பது போல் மலர் செடிகளை வளர்த்து வந்தார். அவரது தோட்டத்தில் துளசிச்செடிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்பட்டது.
மலர்கள் மலர்ந்தன, துளசி மணத்தது. விஷ்ணுசித்தர் அவற்றைப் பறித்து மாலையாக்கி வடபத்ரசாயிக்கு அணிவித்து கண்களில் நீர் மல்க, பார்த்து ரசித்தார். மனதுக்குள் ஆனந்தம் பொங்கியது. அப்போது, மதுரையில் வல்லபதேவனின் ஆட்சி நடந்தது. அவனுக்கு, வேதத்தின் தத்துவம் என்ன, பரம்பொருள் என்பவர் யார்? என்பது குறித்து சந்தேகம் ஏற்பட்டது. அமைச்சர் செல்வநம்பியின் ஆலோசனையின் பேரில், இது குறித்து விளக்க, அறிஞர்களை அழைக்க முடிவெடுத்து, ஒரு போட்டியை அறிவித்தான். சிறந்த கருத்துக்களைத் தருவோருக்கு பொற்கிழி பரிசளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அவையின் நடுவே, ஒரு கம்பத்தில் பொற்காசுகள் கொண்ட பணமுடிப்பு தொங்க விடப்பட்டது. எல்லா அறிஞர்களும் தங்கள் கருத்தைச் சொல்ல வேண்டும். சரியான கருத்தை யார் சொல்கிறாரோ, அவரை நோக்கி அந்த கம்பம் சாயும். அவர் பணமுடிப்பை எடுத்துக் கொள்ளலாம் என்பது போட்டி. பல அறிஞர்கள் கருத்தைக் கூறினர். ஆனால், கம்பம் சாயவில்லை. அப்போது, திருமால், விஷ்ணு சித்தர் கனவில் தோன்றி, மன்னனின் சந்தேகத்தை தீர்த்து, பரிசைப் பெற்றுக் கொள்ள அருளினார்.
கல்வியறிவற்ற தன்னால் எப்படி அதற்கு விளக்கமளிக்க முடியும் என்று விஷ்ணு சித்தர் கேட்க, அதை நான் பார்த்துக் கொள்கிறேன்... என்றார். இதேபோல், செல்வநம்பியின் கனவிலும் தோன்றி, விஷ்ணு சித்தரை மரியாதையுடன் அரண்மனைக்கு அழைத்து வர கட்டளையிட்டார். விஷ்ணு சித்தரும் மதுரை வந்தார். கல்வியறிவற்ற அவரைக் கண்டு பண்டிதர்கள் ஏளனம் செய்தனர். அவர் அதை பொருட்படுத்தாமல் விளக்கத்தை ஆரம்பித்ததும், அவையே நிசப்தமானது. விஷ்ணு சித்தரின் வாயிலிருந்து மழை போல் அரிய கருத்துக்கள் வெளிப்பட்டன. கம்பம் அவர் முன்னால் வளைந்து நின்றது. மன்னன் மகிழ்ந்து அவரை வாழ்த்த, இது என் திறமையல்ல... பெருமாளின் அருள் என்றார். மன்னன் அதை அவரது தன்னடக்கமாகக் கருதி, பட்டத்து யானையில் ஏற்றி ஊரையே பவனி வரச்செய்தான். அப்போது, திருமால், ஸ்ரீதேவி பூதேவியுடன் கருட வாகனத்தில் எழுந்தருளி காட்சி தந்தார். உடனே அவர், பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்ற பாசுரம் பாடி, பெருமாளே... இவ்வளவு அழகாக இருக்கிறாயே... உன் மேல் ஊரார் கண்பட்டால் உனக்கு திருஷ்டி வந்து விடாதா? என்று பாசத்தோடு கேட்டார். இதன் பின் ஊர் திரும்பி, பூமாலையுடன் பாமாலையும் சாத்தி வழிபட்டு வந்தார். பெருமாளையே வாழ்த்தியவர் என்பதால், விஷ்ணுசித்தர் என்ற பெயர் மாறி, பெரியாழ்வார் என்ற பெயர் ஏற்பட்டது. தன்னை கண்ணனின் தாய் யசோதை போல் கற்பனை செய்து, பல பாசுரங்களை பாடியுள்ளார் பெரியாழ்வார். பெரியாழ்வார் திருநட்சத்திர திருநாளில், அவரை வணங்கி, கடவுளை நேசிக்கும் பண்பைப் பெறுவோம்.