பதிவு செய்த நாள்
25
ஜூன்
2013
02:06
வகுப்பில் கொஞ்சம் சுமாரான மாணவன் அவன். அவனை தண்டிக்க ஆசிரியர் சொன்னார்; அந்த மூலையிலே போய் தோப்புகர்ணம் போடு...! பிள்ளையார் கோயிலுக்குச் செல்பவர்கள் விநாயகரைப் பார்த்தவுடன் தோப்புகர்ணம் போடுகின்றனர். அதேபோல் வகுப்பில் மாணவர்கள் தவறு செய்தால் ஆசிரியர்கள் தோப்புகர்ணம் போடச் சொல்கின்றனர். வெவ்வேறு நிலைகளில் தோப்புக்கர்ணம் போட்டாலும் இரண்டிற்குமான பலன் ஒன்றுதான்.
அது, புத்திக் கூர்மை அடைதல். நம்முடைய காதுகளுக்கும் மூளையின் செயல்பாட்டுக்கும் தொடர்பு உண்டு. இதனை அறிந்துதான் நம் முன்னோர் தோர்பி கர்ணம் போடச் சொன்னார்கள். தோப்பு கர்ணத்தின் உண்மையான பெயர் தோர்பி கர்ணம். வடமொழிச் சொல்லான இச்சொல், தோப்பு கர்ணம் ஆகிவிட்டது. தோர்பி கர்ணம் என்றால், கைகளால் காதுகளைப் பிடித்துக் கொள்ளுதல் என்று அர்த்தம். அப்படிக் கைகளால் காதுகளைப் பிடித்துக் கொள்ளும் போது வலது காது இடது மூளையின் செயல்பாட்டுடனும், இடது காது வலது மூளையின் செயல் திறனுடனும் தொடர்பு கொள்கிறது. இதனால் மூளையின் செயல் திறன் அதிகரிக்கிறது. என்றோ நம் முன்னோர் சொல்லிவைத்த இந்த விஷயத்தை இன்று ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். அதுமட்டுமா? அமெரிக்காவில் இதனை சொல்லி தரவும் செய்கிறார்கள். நம்முடைய தோப்புகரணத்திற்கு அங்கே சூப்பர் ப்ரெயின் யோகா..! நரம்பியல் நிபுணர் கடந்த இருபது வருடங்களாக இதுபற்றி ஆராய்ந்து நம் காதுகள் முழு உடலுக்கும் சமமானவை என்கிறார். சீனர்கள் இதனை அக்குபஞ்சர் என்கிறார்கள் கலிபோர்னிய பல்கலைக் கழகத்தின் ரேடியாலஜி நிபுணர் தோப்புகர்ணம் சிறப்பான பலன் தரக்கூடிய யோகா என்கிறார்.
தாயின் கருவில் இருக்கும் குழந்தையின் அமைப்பினைப் போன்றே காது அமைந்துள்ளது. இப்பொழுது புரிகிறதா; காதுகள் மூளையைக் கட்டுப்படுத்தும் கருவியாக உள்ளது. நம் முன்னோர்கள் அன்று சொன்னயாவும் அர்த்தம் உள்ளவை. அவற்றுள் தோப்பு கர்ணமும் ஒன்று. இதை தயங்காமல் செய்தால் மூளையின் செயல் திறன் அதிகரிக்கும். அதனால் உங்கள் அறிவாற்றல் பெருகும் ஆயுள் அதிகரிக்கும்.