பதிவு செய்த நாள்
26
ஜூன்
2013
10:06
கேதார்நாத்: உத்தரகண்ட்டில், மழை வெள்ளத்தில் கடுமையாக பாதிப்புக்குள்ளான கேதார்நாத் கோவில், மூலஸ்தான ஜோதிர்லிங்கத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என, கோவில் பண்டிதரும், "மாற்றக் கூடாது; அதே இடத்தில் வைத்தே வழிபட வேண்டும் என, துவாரகா சங்கராச்சாரியாரும் கூறியுள்ளதால், பரபரப்பு நிலவுகிறது. கேதார்நாத் கோவிலை நிர்வகிக்கும், துவாரகா பீட சங்கராச்சாரியார், சுவாமி சொரூபானந்தா கூறியதாவது: காலம் காலமாக கோடிக்கணக்கான பக்தர்கள் வழிபடும் ஜோதிர் லிங்கத்தை, அதன் மூலஸ்தானத்திலிருந்து அகற்றுவது, ஆகம விதிகளின் படி தவறு. முன்னோர்களால் நிறுவப்பட்ட இடத்திலிருந்து, லிங்கத்தை அகற்றுவதன் மூலம், விக்ரகத்தின் புனிதத் தன்மை குறைந்து விடும். எந்த சூழ்நிலையிலும், லிங்கம் அங்கிருந்து அகற்றக் கூடாது. கோவில் பண்டிதர், ஜோதிர் லிங்கத்தை அகற்றலாம் என, ஆலோசனை வழங்கியுள்ளது கண்டனத்திற்குரியது. மீறி செயல்பட்டால், அவரை கோவிலை பராமரிக்கும் பொறுப்பிலிருந்து நீக்கவும் தயங்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க, "மாஜி அமைச்சர் சுரேஷ் பச்சோரி, ஜனாதிபதி பிரணப்முகர்ஜியை சந்தித்து பேச உள்ளார்.